முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் பணிகள் என்னென்ன? அரசாணை வெளியீடு


முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் பணிகள் என்னென்ன? அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 22 Jun 2021 10:50 PM GMT (Updated: 22 Jun 2021 10:50 PM GMT)

தமிழக முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் பணிகள் என்னென்ன என்பது பற்றிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன் தொடக்கமாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான பாதைகளை வகுத்து, தமிழக அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அந்த குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அந்த குழுவின் பணிகள் குறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

பொருளாதார ஆலோசனை குழு

கொரோனா தொற்று பரவலால் கடுமையான நிதி நெருக்கடியில் தற்போது அரசு சிக்கியுள்ளது. தமிழக அரசின் தற்போதய நிலை, பெருத்த வருவாய் இழப்பிலும், அதிக கடன் சுமையிலும், நிதிப்பற்றாக்குறையிலும் உள்ளது.

ஆனால் அதேநேரத்தில், மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி விரைவாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

எனவே இந்த சூழ்நிலையில் அரசுக்கு பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. இதற்காக தமிழகத்தின் பொருளாதாரம், சமுதாயம், இந்திய மற்றும் உலக பொருளாதார நிலை பற்றி நன்றாக அறிந்த பொருளாதார நிபுணர்கள் தேவையாக உள்ளனர்.

எனவே பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த 5 பேரை உறுப்பினர்களாக கொண்டு முதல்-அமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவை நியமித்து அரசு உத்தரவிடுகிறது.

யார், யார்?

அந்த குழுவில், அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார மேம்பாட்டு நிபுணர் மற்றும் ராஞ்சி பல்கலைக்கழக வருகை பேராசிரியர் ஜீன் ட்ரீஸ், தமிழக அரசின் முன்னாள் செயலாளரும், மத்திய அரசின் செயலாளரும், பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகருமான எஸ்.நாராயணன் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

குழுவின் பணிகள்

இந்த குழுவுக்கான பணிகள் என்ன என்பது பற்றிய ஆணையும் பிறப்பிக்கப்படுகிறது. பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கைகள், சமூகநீதி, மனித மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை தொடர்பான பொதுவான வழிகாட்டுதல்களை இந்த குழு அளிக்கும். குறிப்பாக, பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான மேம்பாடு பற்றிய வழிகாட்டுதல்களை வழங்கும்.

பொருளாதார வளர்ச்சிக்கான உந்துதல், வேலைவாய்ப்பு மற்றும் மாநில உற்பத்திகள் பற்றிய கருத்துகளை வழங்கும். மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி மேம்பாட்டு வழிகாட்டுதல்கள், மக்களுக்கு இன்னும் சிறப்பான சேவைகளை வழங்கும் மாநிலத்தின் திறனை மேம்படுத்துவது பற்றிய ஆலோசனைகளை இந்த குழு அளிக்கும்.

புதிய சிந்தனைகள், வளர்ச்சித் தடைகளுக்கான தீர்வு ஆகியவற்றையும் குழு வழங்கும்.

முதல்தர குழு

இந்த குழு அவ்வப்போது கூடியோ அல்லது காணொலி மூலமாகவோ ஆலோசிக்கலாம். மாநில அரசின் நோக்கத்தை அடைவதற்கான செயல்பாட்டு முறைகளை இந்த குழுவே முடிவு செய்யலாம்.

விரைவாக செயல்பட்டு முதல்-அமைச்சருக்கோ அல்லது அரசுக்கோ ஆலோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குழு உறுப்பினர்கள் அவர்களாகவோ அல்லது அழைப்பின் பேரிலோ முதல்-அமைச்சரை சந்திக்கலாம்.

இந்த குழுவின் செயலகமாக நிதித்துறை இருக்கும். குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இருப்பார். பயணம், வரவேற்பு செலவீனம் போன்றவற்றில் இந்த குழு முதல்தர குழுவாக கருதப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story