ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது சமூக அநீதி


ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது சமூக அநீதி
x
தினத்தந்தி 22 Jun 2021 11:47 PM GMT (Updated: 22 Jun 2021 11:47 PM GMT)

ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதால் நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது சமூக அநீதி என்று நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நீட் தேர்வால் மருத்துவ மாணவர் சேர்க்கையில் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்பதை ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு என்பது மருத்துவக்கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கானது அல்ல. அது தனியார் பயிற்சி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அவற்றுக்கு வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும்.

சம வாய்ப்பு வழங்கவில்லை

இதை நன்கு உணர்ந்திருந்ததால்தான் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக நான் இருந்தவரை அனுமதிக்கவில்லை.

கல்வி, வேலை வாய்ப்பு அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். ஆனால், நீட் தேர்வு அத்தகைய வாய்ப்புகளை வழங்கவில்லை. நீட் தேர்வில் கேட்கப்படும் பெரும்பான்மையான வினாக்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்படுகின்றன.

இது, தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு எதிரான அம்சம் ஆகும். எந்த வகையில் பார்த்தாலும் நீட் தேர்வு கிராமப்புற, ஏழை, அரசு பள்ளி மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்கவில்லை என்பதால் அத்தேர்வு நீடிப்பது சமூக அநீதி ஆகும்.

நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பு

நீட் தேர்வுக்கு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. எனவே, ஏழை, கிராமப்புற, மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

நீட் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து நடத்தி நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பைப் பெற வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புற ஏழை மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தமிழக அரசுக்கு கமிட்டி பரிந்துரைக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு அழுத்தம்

இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய மாநில முதல்-அமைச்சர்களின் கூட்டணியை உருவாக்கி நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தரும்படியும்அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசுக்கு பரிந்துரைக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story