தி.மு.க. யாராலும் அடக்க முடியாத யானை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. யாராலும் அடக்க முடியாத யானை சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2021 6:15 AM GMT (Updated: 2021-06-24T11:45:43+05:30)

தி.மு.க. யாராலும் அடக்க முடியாத யானை; நான்கு கால்கள் தான் யானையின் பலம்; சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவை திமுகவின் கால்கள் என முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.

சென்னை

சட்டசபையில்  முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின்  இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான்.   அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு நான். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி 

பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்.

இரு தினங்களாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்கள், அவர்களின் கருத்தை நான் அறிவுரையாக எடுத்துக் கொள்கிறேன்.

5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை கவர்னர் உரையில் சொல்லி விட முடியாது; கவர்னர்  உரை முன்னோட்டம் தான்

தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

மீத்தேன், நியூட்ரினோ எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

அனைத்து நகரப் பேருந்துகளிலும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம்  பாலினத்தவருக்கு இலவச பயணம்; ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

தி.மு.க யாராலும் அடக்க முடியாத யானை; நான்கு கால்கள் தான் யானையின் பலம்; சமூக நீதி, சுயமரியாதை, மாநில உரிமை, மொழிப்பற்று ஆகியவை திமுகவின் கால்கள்

கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என எடப்பாடி பழனிசாமியின் கையை யாரும் கட்டி வைக்கவில்லை; நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதை போல பிப்ரவரி முதல் மே மாதம் வரை அவர் பணிகள் செய்ய மறந்துவிட்டார்.

கடந்த ஆட்சியிடம் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட சொன்னேன்; ஏற்கவில்லை ஆட்சிக்கு வரப்போவதில்லை என அலட்சியமாக இருந்ததால்தான் கொரோனா தொற்று அதிகரித்தது.

தமிழகத்தில் போர்கால அடிப்படை நடவடிக்கைகளால், கொரோனா தொற்று 7 ஆயிரமாக குறைந்துள்ளது. கொரோனா 3வது அலை வந்தாலும், அதை எதிர்க்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

வடமாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க திண்டிவனம் மற்றும் செய்யாறு பகுதியில் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும்.

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின்படி 75,546 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என கூறினார்.

Next Story