சொத்துக்காக வயதான தம்பதியை கொன்ற மகன்-2 பேரன்கள் கைது


சொத்துக்காக வயதான தம்பதியை கொன்ற மகன்-2 பேரன்கள் கைது
x
தினத்தந்தி 24 Jun 2021 9:09 PM GMT (Updated: 2021-06-25T02:39:25+05:30)

சொத்துக்காக வயதான தம்பதியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய அவர்களது மகன் மற்றும் பேரன்களை போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம், குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). இவருடைய மனைவி கோசலை (75). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இருவரும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, அந்த வயதான தம்பதியின் உடல்கள் அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருந்தது. எனவே அந்த தம்பதி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

தந்தை-2 மகன்கள் கைது

ஆனால் பிரேத பரிசோதனையில், அந்த தம்பதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இதையடுத்து அந்த தம்பதியின் மகன் ஆனந்தன் (55) மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் (33), மோகன்குமார் (25) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சொத்துக்காக வயதான தம்பதியை கழுத்தை நெரித்து கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கைதான ஆனந்தனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனது தந்தை துரைசாமிக்கு சுமார் 10 ஏக்கர் நிலம் உள்பட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்தின் பாகம் சகோதரிகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக முழு சொத்தையும் நானும், எனது மகன்கள் இருவரும் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எனது தாய்-தந்தையை கொலை செய்திட திட்டமிட்டோம். அதன்படி சம்பவத்தன்று நாங்கள் 3 பேரும் சேர்ந்து எனது தந்தை, தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டோம்.

பின்னர் அது கொலை என தெரியக்கூடாது என்பதற்காக அவர்களின் உடல் அருகே விஷ பாட்டிலை வைத்து விட்டு அவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரை நம்ப வைக்க நாடகமாடினோம். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்ததால் போலீசில் சிக்கி கொண்டோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Next Story