தமிழகம் மிகைமின் மாநிலமாக இருந்தது: அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை


தமிழகம் மிகைமின் மாநிலமாக இருந்தது: அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை
x
தினத்தந்தி 26 Jun 2021 8:37 PM GMT (Updated: 2021-06-27T02:07:49+05:30)

அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறையில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. மாறாக தமிழகம் மிகைமின் மாநிலமாக இருந்தது என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

சென்னை,

சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் மின்சாரத்துறை முன்னாள் அமைச்சரான பி.தங்கமணி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து, 2019-ம் ஆண்டுக்கான மத்திய தணிக்கைக் குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை மிகைப்படுத்தி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. மத்திய தணிக்கைத் துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டமுறைக் கழகம் உள்பட 75 பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தமாக ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ.13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் நஷ்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரத்துறையில் ஏற்பட்ட இழப்புக்கு, மின்சாரக் கொள்முதல், உற்பத்தி செலவு, பணியாளர் மற்றும் நிதி செலவினங்களே காரணம் என்று தணிக்கைத் துறையே தெரிவித்துள்ளது. எங்கேயும் தவறு நடைபெற்றதாக சொல்லவில்லை.

மின்சார வாரியத்தின் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காமலோ, அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாமலோ, தமிழகத்தின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்காமலோ, மக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டுவர முடியாது. தி.மு.க. ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம், நிலக்கரி போன்றவற்றை வாங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று 2010-ம் ஆண்டில் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தியதால்தான் 2014, 2019 காலகட்டத்தில் ரூ.171.57 கோடி அளவுக்கு மின்உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை ரெயில்கள் மூலம் நிலக்கரியை அனுப்பியதில், ரூ.55.37 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்றும், ரெயில் சரக்கு பெட்டிகளின் கொள்ளளவைவிட குறைத்து நிலக்கரியை ஏற்றியதால் பயனற்ற சரக்கு கட்டணமாக ரூ.101.35 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மின்சாரம் கொள்முதல் செய்ய 8 தனியார் நிறுவனங்களிடம் நீண்டகால ஒப்பந்தம் போட்டதில் ரூ.712 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில், மற்ற மாநிலங்களில் யூனிட் ரூ.5.50-க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. தமிழகத்தில் அதைவிட குறைவாக ரூ.4.91 க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனமான ஜி.எம்.ஆர். பவர் கார்ப்பரேசனிடம் இருந்து மின்சாரம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தம் 1999-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையாகும். ஜி.எம்.ஆர். நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கியதில் வாரியத்துக்கு ரூ.424.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக மின்துறையில் முறைகேடுகள் நடந்ததாகவோ, மக்கள் மின்வசதியின்றி தவித்ததாகவோ எந்த குறையும் கூறப்படவில்லை. இருந்தாலும், ரூ.13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் நஷ்டம் என்று தணிக்கைத்துறை சொல்லி இருக்கிறது.

யூகத்தின் அடிப்படையில் தணிக்கைத்துறை அறிக்கையில் இதுபோன்ற கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story