13 ஆண்டுகளாக தவறான தகவல் அளித்த அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி


13 ஆண்டுகளாக தவறான தகவல் அளித்த அதிகாரிகளுக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 Jun 2021 12:25 AM GMT (Updated: 27 Jun 2021 12:25 AM GMT)

ஊழியர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக 13 ஆண்டுகளாக தவறான தகவல் அளித்த அதிகாரிகளுக்கு எதிராக ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

அரியலூர் நகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றிய ரங்கநாதன், வெலிங்டன் ஆகியோரை பணி நிரந்தரம் செய்து, நகராட்சி செயல் அலுவலர் கடந்த 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் உத்தரவை செயல்படுத்தவில்லை. அதனால், இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 3 மாதங்களுக்குள் இருவரையும் பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட்டது. அதை எதிர்த்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதன்பின்னரும் பணி நிரந்தரம் செய்யாததால், ரங்கநாதன், வெலிங்டன் சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தியுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால், மனுதாரர்களுக்கு பணப் பலன்கள் வழங்கப்படவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் சார்பில் ஐகோர்ட்டில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணையின்போது, இருவருக்கும் தலா ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 772 ஊதிய பாக்கி வழங்க வேண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், போதிய நிதி இல்லாததால் இத்தொகையை வழங்க அவகாசம் வேண்டும் எனவும் நகராட்சி சார்பில் கேட்கப்பட்டது.

அதையடுத்து, அந்த தொகையை இரு தவணைகளாக வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, இரு தவணைகளுக்கான காசோலைகளை வழங்கிய நகராட்சி ஆணையர், கொரோனா காரணமாக வங்கியில் போதிய பணமில்லாததால் காசோலைகளை வங்கியில் செலுத்த வேண்டாம் என கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காசோலைகளை வங்கியில் செலுத்த வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விவரம், நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

நகராட்சி நிர்வாகத்தின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘வங்கியில் பணமில்லை எனத் தெரிந்தே காசோலைகள் வழங்கியது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். 2008-ம் ஆண்டு முதல் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க, நகராட்சி நிர்வாகம் கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்துள்ளது. இது கோர்ட்டு அவமதிப்பு செயல் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகளுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அரியலூர் நகராட்சி ஆணையர் வருகிற ஜூலை 7-ந் தேதி நேரில் ஆஜராகி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Next Story