ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2021 1:43 AM GMT (Updated: 27 Jun 2021 1:43 AM GMT)

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பு ஊசி சிறப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதையடுத்து ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு அரசின் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கி மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வாழ்க்கையே ஒரு விளையாட்டு என்று சொல்வார்கள். அரசியலை விளையாட்டாக நினைப்பவர்களும் நம் நாட்டிலே இருக்கிறார்கள். ஆனால், விளையாட்டு துறையை விளையாட்டாக நினைத்துவிடக்கூடாது. அதை விளையாட்டாக நினைத்தால் விளையாட்டாக போய்விடும். ஆகவே அரசு இன்றைக்கு இந்த விளையாட்டு துறையை மேன்மைமிக்க துறையாக உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறது. விளையாடுபவர்களை விளையாட்டுக்காரர்கள் என்று சொல்வதில்லை, அவர்களை ‘விளையாட்டு வீரர்கள்-வீராங்கனைகள்’ என்றுதான் சொல்கிறோம். இந்த வீரர்களால்-வீராங்கனைகளால் நாட்டுக்கு பெருமை. நாளைய தலைமுறைக்கு ஒரு வலிமை.

கிரிக்கெட்டில் டோனி மாதிரி விளையாட்டு வீரர் ‘சிக்சர்' அடித்தால், மைதானத்தில் இருக்கும் அத்தனைபேரும் அவர்களே ‘சிக்சர்' அடித்த மாதிரி சந்தோஷப்படுவார்கள். அதேபோன்று, கால்பந்தில் ‘ரொனால்டோ’ கோல் போட்டால், ஸ்டேடியத்தில் கூடியிருக்கும் அத்தனை பேரும் கோல் போட்டது போன்ற உணர்வை பெறுவார்கள். அதை டி.வி.யில் பார்க்கின்ற ரசிகர்களுக்கும், மக்களுக்கும் அந்த உணர்வுதான் ஏற்படுகிறது. அவர்களில் இருந்து தெண்டுல்கர்களும், டோனிகளும் பி.டி.உஷாக்களும், மல்லேஸ்வரிகளும் உருவாகிறார்கள். எனவே விளையாட்டு வீரர்கள் நலன் பேணி பாதுகாக்கப்படும். அரசை பொறுத்தவரைக்கும் நிச்சயமாக என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்கும்.

சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் சிறந்து விளங்கக்கூடிய நமது வீரர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.10 லட்சம் வரை விளையாட்டு கருவிகள், போட்டிகளுக்கான பயணச்செலவு ஆகியவற்றுக்கான நிதியுதவிகள் எல்லாம் வழங்கப்பட்டு வருகின்றன. சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய வகையில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை உயர்மட்ட பயிற்சி, உலகளாவிய போட்டிகளுக்கான பயணச்செலவு ஆகியவற்றுக்கான நிதயுதவி செய்யப்படுகிறது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 23-7-2021 முதல் 8-8-2021 வரை நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன், வருண் எ.தக்கர் மற்றும் கே.சி.கணபதி ஆகியோர் பாய்மரப் படகோட்டுதல் போட்டியிலும், ஜி.சத்தியன் மற்றும் எ.சரத்கமல் ஆகியோர் மேஜை பந்து போட்டியிலும், சி.ஏ.பவானி தேவி வாள் சண்டைப் போட்டியிலும், மாற்றுத் திறனாளர்களுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் டி.மாரியப்பன் என ஆக மொத்தம் 7 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கிறார்கள். சி.ஏ.பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் சிறப்பு ஊக்கத் தொகை அரசால் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 6 விளையாட்டு வீரர்களுக்கும் அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வழங்கப்பட இருக்கிறது.

விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தேவையான உடற்பயிற்சி மற்றும் அறிவியல் ரீதியிலான பயிற்சி மேற்கொள்வதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்தில் அரசு ஏற்படுத்தித்தரக்கூடிய அந்தப் பணிகளையெல்லாம் நிச்சயமாக அரசு செய்யும். 12 வயதுக்குள்ளாகவே, பல்வேறு விளையாட்டுகளில் திறமையான குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்குவதற்கு இந்த அரசு உறுதியாக இருக்கும். சென்னையில் பிரமாண்டமான விளையாட்டு அரங்கம் அமைத்து எல்லா வகையான போட்டிகளுக்கும் உயர்தரப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

ஒலிம்பிக் அகாடமி உள்ளிட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாக இந்திய அளவிலான தரவரிசையில் தமிழ்நாட்டையும், சர்வதேச அளவிலான தரவரிசையில் இந்தியாவையும் நாம் முன்னேற்ற முடியும்.

இந்த திசையில் நாம் தொடர்ந்து பயணித்தால் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை ஒரு நாள் பின்னுக்கு தள்ளக்கூடிய ஒரு சூழ்நிலை நிச்சயம் ஏற்படும். உலக அரங்கில் விளையாட இருக்கக்கூடிய நமது விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தவேண்டிய கடமை நம் அரசுக்கு இருக்கிறது. எனவே, தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பரிசுத் தொகை அறிவிப்பை வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், இ.பரந்தாமன், டாக்டர் என்.எழிலன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் ஆதவ் அர்ஜூன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story