அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: கைதான கணவன்-மனைவி பரபரப்பு வாக்குமூலம் 150 பேரிடம் ரூ.5½ கோடி சுருட்டியதாக தகவல்


அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: கைதான கணவன்-மனைவி பரபரப்பு வாக்குமூலம் 150 பேரிடம் ரூ.5½ கோடி சுருட்டியதாக தகவல்
x
தினத்தந்தி 9 July 2021 11:44 PM GMT (Updated: 9 July 2021 11:44 PM GMT)

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் கைதான கணவன்-மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

சென்னை, 

சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பணம் வாங்கி மோசடி செய்யும் கும்பலின் கைவரிசையை போலீசாரால் ஒழித்துக்கட்ட முடியவில்லை. அரசு வேலையில் மோகம் கொண்டு அதற்காக குறுக்கு வழியில் பணம் கொடுப்பவர்களை இந்த கும்பல் தங்கள் வலையில் விழவைத்து விடுகிறது. இதுபோன்ற ஒரு மோசடி கும்பலின் ஆசை வலையில் சிக்கி 85 பேர் பணத்தை வாரி கொட்டி உள்ளனர். அந்த மோசடி கும்பல் வேலை கிடைத்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை காட்ட, போலியான அரசு ஆணை நகல்களை கொடுத்து ரூ.4½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியதாக முதலில் புகார் கூறப்பட்டது.

ஏமாந்தவர்கள் பட்டியலில் உள்ள ஆனந்தி என்ற பெண் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து முறையிட்டார். கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி வழக்குப்பதிவு செய்து மோசடி கும்பலைச் சேர்ந்த கணவன்-மனைவி அருண்சாய்ஜி, நந்தினி மற்றும் ரேஷ்மா தாவூத் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அருண்சாய்ஜி, அவரது மனைவி நந்தினி ஆகியோர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தங்களது மோசடி வலையில் 150 பேர் வரை சிக்கி உள்ளனர் என்றும், அவர்களிடம் ரூ.5½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டியதாகவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார், கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டும் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story