சர்க்கரை என பிளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால் எலும்பும் தோலுமாக மாறிய சிறுமி


சர்க்கரை என பிளிச்சிங் பவுடர் சாப்பிட்டதால் எலும்பும் தோலுமாக மாறிய சிறுமி
x
தினத்தந்தி 10 July 2021 7:08 AM GMT (Updated: 10 July 2021 9:24 AM GMT)

இசக்கியம்மாள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறார். திரவ உணவு மட்டுமே அவரால் குடிக்க முடிகிறது. மேலும் மூச்சுத்திணறலாலும் அவர் அவதிப்படுகிறார்.

செங்கோட்டை: 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேலூர் கே.சி.ரோடு குடிநீர் தொட்டி கீழ்புறம் பகுதியை சேர்ந்தவர் சீதாராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமா. இந்த தம்பதியின் 2-வது மகள் இசக்கியம்மாள் (வயது 5). இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அருகில் உள்ள ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அப்போது அவர் அந்த வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என்று நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இசக்கியம்மாள் வலியால் துடித்தார். இதை பார்த்த அந்த வீட்டுக்காரர் இதுபற்றி சீதாராஜீக்கு தகவல் கொடுத்தார்.

இதை அறிந்த சீதாராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இசக்கியம்மாளை தூக்கி வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இசக்கியம்மாளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீதாராஜ் தனது மகள் இசக்கியம்மாளை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் நாளாக, நாளாக இசக்கியம்மாள் உடல் மெலிந்து கொண்டே வருகிறது. பிளீச்சிங் பவுடரை சாப்பிடுவதற்கு முன் அழகாக இருந்த இசக்கியம்மாள் தற்போது உடல் மெலிந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறார்.

இசக்கியம்மாள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகிறார். திரவ உணவு மட்டுமே அவரால் குடிக்க முடிகிறது. மேலும் மூச்சுத்திணறலாலும் அவர் அவதிப்படுகிறார். பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தற்போது கொரோனா தொற்று காலகட்டமாக உள்ளதால் போதிய வருமானமின்றி குழந்தையை சரிவர கவனிக்க முடியாமல் சீதாராஜ் பரிதவித்து வருகிறார்.

இந்த தகவல் செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்கண்ணனுக்கு தெரியவந்தது. அவர் இசக்கியம்மாளின் நிலையை அறிந்து சிறுமியை மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.

Next Story