அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடி தூவி தப்பியோட முயன்ற கைதி


அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடி தூவி தப்பியோட முயன்ற கைதி
x
தினத்தந்தி 11 July 2021 2:20 AM GMT (Updated: 11 July 2021 2:20 AM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ்காரர் மீது மிளகாய் பொடி தூவிவிட்டு கைதி தப்பியோட முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் போலீஸ்காரர் மடக்கிப்பிடித்தார்.

நெல்லை, 

நெல்லை பாளையங்கோட்டை எம்.எல்.பிள்ளை நகரை சேர்ந்த மரிய சிலுவை (வயது 44). இவர் கடந்த மாதம் ஒரு கொலை வழக்கில் கைதாகி நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மரிய சிலுவை, கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கராஜிடம் கூறினார். இதையடுத்து போலீஸ்காரர் தங்கராஜ், அவரை கழிவறைக்கு அழைத்துச்சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மரிய சிலுவை மிளகாய் பொடியை போலீஸ்காரர் மீது தூவிவிட்டு தப்பியோட முயன்றார். ஆனால் தங்கராஜ் சுதாரித்துக்கொண்டு மிளகாய் பொடி எரிச்சலுடன் மரிய சிலுவையை விரட்டிச்சென்றார். மேலும் அங்கிருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் உதவியுடன் சிறிது தூரத்தில் மரிய சிலுவையை மடக்கிப்பிடித்தார்.

இதுகுறித்து ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி போலீசார், மரிய சிலுவை மீது தப்பியோட முயன்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மரிய சிலுவைக்கு மிளகாய் பொடி கிடைத்தது எப்படி? என விசாரணை நடத்தப்பட்டது. அதில் சமீபத்தில் மரிய சிலுவையை பார்க்க அவருடைய மனைவி முத்துக்கனி வந்துள்ளார். அப்போது அவர் மரிய சிலுவையிடம் மிளகாய் பொடியை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது மனைவி முத்துக்கனியையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story