21 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2 மணி நேரம் 8 நிமிடத்தில் கடந்தார்


21 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் 2 மணி நேரம் 8 நிமிடத்தில் கடந்தார்
x
தினத்தந்தி 12 July 2021 1:21 AM GMT (Updated: 12 July 2021 1:21 AM GMT)

இளைஞர்களுக்கு உடற்பயிற்சி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 21 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் போட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, பதக்கம் வென்றார். போட்டி தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடத்தில் கடந்தார்.

சென்னை, 

‘ஓடலாம் நோயின்றி வாழலாம்' என்ற பெயரில் 21 கி.மீ. தூரத்திற்கான மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடந்தது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். இது அவரின் 129-வது (லண்டன் மெய்நிகர் சேலஞ்) மாரத்தான் போட்டியாகும்.

இந்த போட்டி கிண்டி முதல் மெரினா கருணாநிதி நினைவிடம் வரை நடந்தது. போட்டியை 2 மணி நேரம் 8 நிமிடத்தில் மா.சுப்பிரமணியன் நிறைவு செய்து பதக்கம் வென்றார். மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் கருணாநிதி நினைவிடத்தில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனா பேரிடர் காலத்தில் உடற்பயிற்சி என்பது இன்றியமையாதது என்பதை எடுத்து விளக்குகிற வகையில் எனது 21 கிலோ மீட்டருக்கான 129-வது மாரத்தான் போட்டியை அதிகாலை கிண்டியில் தொடங்கி மெரினாவில் நிறைவு செய்திருக்கிறேன். ஏறத்தாழ 2 மணி நேரம் 8 நிமிடங்களில் 21 கி.மீ. தூரத்தை கடந்திருக்கிறேன்.

இதுவரை 129 மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். ‘ஓடலாம் நோயின்றி வாழலாம்’ என்கிற இலக்கோடு, இளைஞர்களுக்கு உடற்பயிற்சி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தானை ஓடி நிறைவு செய்திருக்கிறேன்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டேன். ஆனாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் கை, கால் வலி என்ற அளவில் இரண்டொரு நாள் என்கிற அளவிலேயே கொரோனா என்னை விட்டு ஒழிந்தது. அதன் பிறகு 10 நாட்கள் கழித்து 10 கி.மீ. தூரத்தை ஓடிக்கொண்டிருந்தேன். எங்கே இருந்தாலும் ஓடிக்கொண்டிருக்கிற பழக்கத்தை கொண்டிருக்கிறேன்.

ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழக அரசே முன்னின்று பல்வேறு போட்டிகளை நடத்தியிருக்கிறது. அதற்கு பின்னால் வந்த அரசு இதிலெல்லாம் அக்கறை காட்டவில்லை. எதிர்காலத்தில் இது போன்ற விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

டெங்குவினால் இரண்டாயிரத்திற்கும் அதிகமாக ஒரே மாதத்தில் பாதிக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் படிப்படியாக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சென்னையைப் பொறுத்தவரை டிரோன்கள் மூலம் எல்லா நீர்நிலைகளிலும் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டெங்குவை தொடர்ந்து ஜிகா வைரஸ் தொடர்ந்து தாக்காமல் இருக்க மேற்கண்ட பணிகள் கொசு மருந்து தெளிப்பது, புகை மருந்து அடிப்பது, டிரோன்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசி என்பது 11.30 கோடியாகும். இதுவரை 1.60 கோடி தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன. நேற்று (நேற்று முன்தினம்) 5 லட்சம் தடுப்பூசிகள் வந்திருந்தன. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story