தமிழக பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் அதிகம் மத்திய கல்வி அமைச்சகம் தகவல்


தமிழக பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் இடைநிற்றல் விகிதம் அதிகம் மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 12 July 2021 1:28 AM GMT (Updated: 2021-07-12T06:58:48+05:30)

தமிழக பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்த பட்டியலில் தெரியவந்துள்ளது.

சென்னை, 

மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ.) நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளின் தரவுகளை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் 15 லட்சம் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 26 கோடியே 50 லட்சம் மாணவர்களும், அவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க 97 லட்சம் ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

இந்த 15 லட்சம் பள்ளிகளின் 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான அனைத்து தரவுகளையும் ஆய்வுசெய்து அதை தற்போது பட்டியலாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள், இதர பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரத்து 897 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 45 லட்சத்து 93 ஆயிரத்து 422 அரசுப்பள்ளி மாணவர்கள் உள்பட ஒரு கோடியே 33 லட்சத்து 17 ஆயிரத்து 883 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த மாணவ- மாணவிகளில் 2019-20-ம் கல்வியாண்டில் இடைநிற்றல் விகிதத்தை பார்க்கும்போது, முதலாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் 1.1 சதவீதமும், 6 முதல் 8-ம் வகுப்புகளில் 0.4 சதவீதமும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 9.6 சதவீதமும் இருக்கிறது. இதன்மூலம் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் தான் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது தெரியவருகிறது. இதில் 13 சதவீத மாணவர்களும், 6 சதவீத மாணவிகளும் அடங்குவார்கள்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கின்றன. நோய் தொற்று காலத்தில் பல மாணவ-மாணவிகளின் பெற்றோருடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்களில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் அவர்களால் முடிந்த வேலைக்கு செல்ல தொடங்கி இருப்பதாகவும், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது அவர்கள் பள்ளிக்கு வருவார்களா? என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும், இதன் காரணமாக இடைநிற்றல் விகிதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் கல்வியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதேபோல் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தக்கவைத்தல் விகிதத்தை (ரெட்டன்சென் ரேசியோ) பார்க்கும்பொழுது, தொடக்கப்பள்ளிகளில் (1 முதல் 5- ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 94 பேர்தான் 5-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள். நடுநிலை பள்ளிகளில் (1 முதல் 8-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 86 பேர்தான் 8-ம் வகுப்பு வரை படிக்கிறார்கள்.

அதேபோல், உயர்நிலைப்பள்ளிகளில் (1 முதல் 10-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களில் 82 பேர்தான் 10-ம் வகுப்பை முடிக்கிறார்கள். மேல்நிலைப்பள்ளிகளில் (1 முதல் 12-ம் வகுப்பு வரை) முதலாம் வகுப்பில் சேரும் 100 பேரில் 68 பேர் மட்டும் தான் 12-ம் வகுப்பு வரை படித்து முடிக்கிறார்கள்.

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட இந்த தகவல்களும் தமிழக பள்ளி கல்வித்துறையில் அதிர்ச்சியைதான் வெளிப்படுத்தியிருக்கிறது.


Next Story