‘நீட்’ தேர்வுக்கான கல்வி, மாணவர்கள் டாக்டரான பின்பும் கை கொடுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


‘நீட்’ தேர்வுக்கான கல்வி, மாணவர்கள் டாக்டரான பின்பும் கை கொடுக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 14 July 2021 2:57 AM GMT (Updated: 14 July 2021 2:57 AM GMT)

மாணவர்கள் ‘நீட்’ தேர்வுக்கான கல்வியை கற்றுக்கொள்வது, அவர்கள் டாக்டரான பின்பும் கை கொடுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

சென்னை கிண்டி லேபர் காலனியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதில் உறுதியாக இருக்கிறோம். அதற்காகத்தான் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. குழுவின் அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. குழுவுக்கு எதிராக பா.ஜ.க.வை சேர்ந்தவர் கோர்ட்டுக்கு சென்றுள்ளார். ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துகளை கொண்டுள்ள அரசியல் கட்சிகளும் கோர்ட்டை நாடியுள்ளன. இதற்கிடையே ‘நீட்’ தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க. அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானம் நிராகரிக்கப்பட்டு உள்ளது. தீர்மானம் நிறைவேற்றும்போது கூடுதல் பலத்துக்காக குழு அமைத்து அறிக்கை தயாரிக்கப்படுகிறது. ‘நீட்’ தேர்வுக்கான கல்வியை மாணவர்கள் கற்றுக்கொள்வது, ‘நீட்’ தேர்வுக்கு பின்னரும், டாக்டரான பின்னும், அந்த கல்வி அவர்களுக்கு கை கொடுக்கும். ‘நீட்’ தேர்வை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படும் நிலை வரும்போது மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் மன உளைச்சல் ஏற்படாமல் இருக்கவே ‘நீட்’ தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. தடுப்பூசிகள் வந்தவுடன் உடனே மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகளை கண்டறிய ‘மெகா ஸ்கிரினிங்’ செய்யப்பட உள்ளது. அதன்படி அவரவர் வீடுகளுக்கே சென்று ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பின் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சம் பேர் பயனடைவார்கள். இதன் மூலமாக நீரிழிவு நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதுடன் பாதிப்பையும் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்திய பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்பது தொடர்பாக ஆராய்ந்து பணியிடங்கள் நிரப்பப்படும். தற்போது சிலரின் துண்டுதலின்பேரில் செவிலிய உதவியாளர்கள் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story