அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக கிடக்கும் படுக்கைகள் 3-வது அலை வந்தாலும் சமாளிக்க தயார் நிலை


அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக கிடக்கும் படுக்கைகள் 3-வது அலை வந்தாலும் சமாளிக்க தயார் நிலை
x
தினத்தந்தி 14 July 2021 3:10 AM GMT (Updated: 14 July 2021 3:10 AM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் அனைத்தும் காலியாக கிடக்கின்றன. மேலும் 3-வது அலை வந்தாலும் அதை சமாளிக்க தயார் நிலையில் ஆஸ்பத்திரிகள் உள்ளன.

சென்னை, 

தமிழகத்தை கடந்த 1½ ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா முதல் அலையின் போது, அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் 120 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அதன் பிறகு தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொற்று பரவலின் வேகம் படிப்படியாக சரிந்தது.

இந்தநிலையில் கொரோனாவின் தாண்டவம் ஓய்ந்தது என நிம்மதி பெரும் மூச்சு விடும் நேரத்தில், அனைவருக்கும் பேரதிர்ச்சியாய் மீண்டும் தொற்றின் வேகம் மளமளவென உயர ஆரம்பித்து, கொரோனா 2-வது அலை விஸ்வரூபம் எடுத்தது.

முதல் அலையை காட்டிலும், 2-வது அலையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா 2-வது அலையின் கோரமுகம் வெளிவர தொடங்கியது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தையும் தாண்டியது. இதனால் ஆஸ்பத்திரிகளில் இடமில்லாமல், ஒரு படுக்கை வசதிக்காக ஆஸ்பத்திரி வாசலிலே நோயாளிகள் காத்துக்கிடக்கும் நிலை உருவானது.

சாலைகளில் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களின் ‘சைரன்’ சத்தமும், ஆஸ்பத்திரிகளில் திரும்பிய இடமெல்லாம் அழுகுரல் சத்தமும் 24 மணி நேரமும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் ஆஸ்பத்திரிகளில் ஒரு படுக்கையாவது கிடைத்து விடாதா என்ற தவிப்பில் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருந்தனர்.

அதிலும் குறிப்பாக பெரும்பாலானோர் மூச்சுத்திணறலுடன் வருவதால் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளே அதிகளவில் தேவைப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற அரசு, ஆஸ்பத்திரிகளில் மட்டும் அல்லாமல், கல்லூரிகள், மண்டபங்கள், மைதானங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தியது.

இந்தநிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஒரு கட்டத்தில் ஏற்பட, ரெயில்கள், விமானங்கள், கப்பல்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆக்சிஜனும் தடையில்லாமல் இப்போது வரை கையிருப்பில் இருந்து கொண்டிருக்கிறது. கொரோனா மையங்களில் சாதாரண படுக்கைகள் மட்டும் அல்லாமல், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும் உருவாக்கப்பட்டது.

அதன்பிறகு நோயாளிகளுக்கு படுக்கைகளும் எளிதில் கிடைத்தது. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்றின் பரவல் சரிந்து கொண்டு வருகிறது. 36 ஆயிரம் வரை சென்ற தினசரி பாதிப்பு, தற்போது 2,500 வரை குறைந்துள்ளது. இதனால் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் காலியாக கிடக்கின்றன.

குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்து 50 படுக்கைகளில் தற்போது 165 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்ற படுக்கைகள் எல்லாம் காலியாக உள்ளது. அங்கு முதல் 2 தளங்களில் மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் 750 படுக்கைகளில், 70 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற படுக்கைகள் அனைத்தும் காலியாக உள்ளன. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 50 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தற்போது, கொரோனா நோயாளிகளுக்காக அங்கு ஒரு கட்டிடம் மட்டும் ஒதுக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்ற கொரோனா வார்டுகள் அனைத்தும் மற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றப்பட்டு வருகிறது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சராசரியாக 100 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கொரோனா 2-வது அலை தனிந்து வந்தாலும், 3-வது அலையை சமாளிக்க அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவுக்கு ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் அனைத்தும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக மாற்றம் செய்யாமல் அப்படியே வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் தமிழகத்தில் தற்போது 75 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story