100 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் பூமியில் புதைந்தது எப்படி? மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு


100 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் பூமியில் புதைந்தது எப்படி? மீட்பு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
x
தினத்தந்தி 15 July 2021 3:42 AM GMT (Updated: 15 July 2021 3:42 AM GMT)

சென்னையில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெருமாள் கோவில் பூமியில் சிறிதளவு புதைந்தது எப்படி? என்றும், மீட்பு பணிகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை, 

சென்னை, வேளச்சேரி, ராம்நகர் வாசுதேவ பெருமாள், ஸ்ரீ தண்டிசுவரர் கோவில், யோகநரசிம்மர் கோவில் மற்றும் கே.கே.நகர். சக்தி விநாயகர் கோவில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் திருப்பணி மேற்கொள்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வேளச்சேரி ராம்நகர், தெலுங்கு பிராமின் தெருவில் உள்ள வாசுதேவ பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், 100 ஆண்டுகளுக்கு மேலான இந்த கோவில் பூமிக்குள் சிறிதளவு புதைந்துள்ளதை மீட்கவும், கோவில் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், இக்கோவில் சொத்துகளை கண்டுபிடிக்கவும், விரைவில் கோவிலை புதுப்பிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

வேளச்சேரி ஸ்ரீதண்டிசுவரர், யோகநரசிம்மர் கோவில்களில் ஆய்வு செய்த அமைச்சர் கோவில்களுக்கு சொந்தமான இடங்கள், கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை உடனடியாக அகற்றவும், அவற்றை கோவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவில் திருப்பணிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் தொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர், இந்த கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள சிறிய மண்டபங்களை ஆகம விதிகளின்படி சீரமைத்து கோவில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கோவில்களில் ஆகம விதிகளின்படி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்துகளை மீட்டு, வருவாய் பெருக்கவும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. முதல்-அமைச்சர் முதல் கட்டமாக 100 கோவில்கள் திருப்பணிக்கும், தெப்பக்குளங்கள் சீரமைக்கவும், நந்தவனங்கள் மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார்.

அதன்படி உடனடியாக திருப்பணி மேற்கொள்ள வேண்டிய கோவில்கள் விவரம் பட்டியலிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் சிலைகள் பாதுகாப்பு மற்றும் திருட்டு போன சிலைகள் மீட்பு தொடர்பான நடவடிக்கைகள் சிலைகள் பாதுகாப்பு தடுப்பு காவல் பிரிவுடன் இணைந்து துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் அசன் மவுலானா, பிரபாகர ராஜா, சென்னை மண்டல இணை கமிஷனர் மதி ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story