கொரோனா பரவல் தடுப்பிற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி மு.க.ஸ்டாலினிடம் நேரில் நிர்வாகிகள் வழங்கினர்


கொரோனா பரவல் தடுப்பிற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி மு.க.ஸ்டாலினிடம் நேரில் நிர்வாகிகள் வழங்கினர்
x
தினத்தந்தி 15 July 2021 3:49 AM GMT (Updated: 15 July 2021 3:49 AM GMT)

பல்வேறு நாடார் சங்கங்கள் சார்பில் கொரோனா பரவல் தடுப்பிற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட்டது.

சென்னை, 

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை நாடார் பேரவை சார்பில் அதன் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், நிர்வாகிகள் எம்.கண்ணன், ராஜ்குமார், பி.செல்வம் ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர்.

நெல்லை-தூத்துக்குடி மகமை பரிபாலன சங்கம், சென்னை வாழ் நாடார்கள் சங்கம் மற்றும் பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்கம் ஆகியவற்றின் சார்பில் நிர்வாகிகள் பி.சின்னமணி, டி.பத்மநாபன், டி.தங்கமுத்து, சந்திரசேகரன், மாரித்தங்கம் ஆகியோர் சந்தித்து கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆர்.கே.காளிதாசன், ஆர்.சண்முகவேல், ஏ.செல்வராஜ், வி.தங்கவேல் ஆகியோர் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.

கோவை நாடார் சங்கம் அறக்கட்டளை மற்றும் மதுரை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் நிர்வாகிகள் சூலூர் சந்திரசேகரன், பொன்.செல்வராஜ், ஆர்.எஸ்.கணேசன், எஸ்.கே.மோகன், வி.பி.மணி ஆகியோர் ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

பின்னர் நிருபர்களுக்கு எர்ணாவூர் நாராயணன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது தலைமையில் நாடார் சங்கங்களின் தலைவர்கள் இணைந்து கொரோனா பரவல் தடுப்பிற்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதி ரூ.1 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறோம்.

கொரோனா நோய் பரவலை போர்க்கால அடிப்படையில் தடுத்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டான நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார்.

நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அமைச்சர் பதவியையும், சபாநாயகர் பதவியையும் வழங்கி எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். அதற்கும் நன்றி கூறினோம்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியின்போது கிண்டியில் காமராஜ் நினைவிடம் அமைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்கள் போல, காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் அவரது நினைவிடத்தையும் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுப்பொலிவடையச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதுகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் தலைவர் பி.சின்னமணி நாடார், பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து ஆகியோர் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், விளையாட்டுத் துறைக்கு அளவிட முடியாத சேவைகளையும் செய்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

எனவே ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெறும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரில் விருதும், பரிசுகளும் வழங்கப்படும் என்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டசபையில் அறிவிக்க வேண்டும்.

மேலும் சென்னையில் பிரதான சாலை ஒன்றிற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சாலை என பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று நாடார் பேரவை - ரூ.30 லட்சம்; தட்சணமாற நாடார் சங்கம் - ரூ.25 லட்சம்; சென்னை வாழ் நாடார் சங்கம் ரூ.10 லட்சம்; நெல்லை-தூத்துக்குடி மகமை பரிபாலன சங்கம் ரூ.10 லட்சம்; கோவை நாடார் சங்கம் ரூ.15 லட்சம்;

மதுரை நாடார் உறவின்முறை சங்கம் ரூ.5 லட்சம்; பெரம்பூர் வட்டார நாடார்கள் ஐக்கிய சங்கம் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி தொகை, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Next Story