தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள்: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் புதிய நடைமுறை நாளை வெளியாகிறது

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியிடுவதில் புதிய நடைமுறையை அரசு தேர்வுத்துறை கொண்டுவந்திருக்கிறது. அதன்படி, தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் நாளை (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது.
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு கொரோனா காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. மாணவ-மாணவிகளுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 மதிப்பெண் செய்முறை, உள்மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவீதத்துக்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் தேர்வுத் துறையும், கல்வித்துறையும் ஈடுபட்டன.
மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, இணையதளத்தில் பதிவேற்றமும் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, நாளை (திங்கட்கிழமை) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட இருப்பதாக நேற்று முன்தினம் அரசு தேர்வுத்துறை அறிவித்தது. அதற்கான இணையதள முகவரிகளையும் நேற்று வெளியிட்டது.
வழக்கமாக ஒவ்வொரு தேர்வு முடிவும் முழு மதிப்பெண்களாக கணக்கிடப்பட்டுதான் வழங்கப்படும். ஆனால் இந்த முறை எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண்களை கணக்கிடும்போது தசம அடிப்படையில் என்ன மதிப்பெண்கள் வருகிறதோ அதை அப்படியே மாணவர்களுக்கு வழங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, ஒரு மாணவரின் மதிப்பெண்ணை கணக்கிடும்போது, 6 பாடப்பிரிவுகளில் 600 மதிப்பெண்ணுக்கு அந்த மாணவர் பெற்ற மொத்த கூட்டுத்தொகை மதிப்பெண்ணாக 520.76 என்று வந்தால், அந்த மதிப்பெண்ணை முழுமையாக்காமல், அப்படியே தசம எண் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
என்ஜினீயரிங் உள்பட சில உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் கட்-ஆப் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையிலேயே தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். இந்த நிலையில் புதிய நடைமுறையான தசம எண் அடிப்படையில் வரும் மதிப்பெண்கள், கட்-ஆப் மதிப்பெண்ணாக கணக்கிடும்போது எந்த ஒரு மாணவரும் பாதிப்படைய மாட்டார்கள் என்றும், எந்தவித குழப்பமும் இன்றி உயர்கல்வி மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அடித்தளமாக இருக்கும் என்றும் கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Related Tags :
Next Story