சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 July 2021 6:03 AM GMT (Updated: 21 July 2021 6:03 AM GMT)

சிவசங்கர் பாபா வழக்கில் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 

ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். 

சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மேலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும்நிலையில்,  சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. 

இந்த சூழலில், சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக கூறப்படும் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகினர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தநிலையில் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் 3 பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முன்னதாக 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 3 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களின் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துகொண்டனர். மேலும் இரண்டு ஆசிரியர்கள் தலைமறைவாக உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Next Story