புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 25 July 2021 5:47 PM GMT (Updated: 25 July 2021 5:47 PM GMT)

விடுமுறை தினத்தையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

விடுமுறை தினத்தையொட்டி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொரோனா பரவல்
புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு புதுவை கடற்கரை, நோணாங்குப்பம்      படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம், பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா,  மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு வார இறுதிநாட்களில்   தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த     நிலையில் கொரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து வருவதால் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. அதேபோல் மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
நேற்று விடுமுறை தினத்தையொட்டி      புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் கடற்கரை, பாரதி பூங்கா,  நோணாங்குப்பம் படகு     குழாம்   உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் களை கட்டியது. புதுவை நகரில் ஏராளமான வெளிமாநில பதிவெண் கொண்ட கார்கள் உலா வந்தன. குறிப்பாக கடற்கரை சாலையில் திருவிழா கூட்டம்    போல்  மக்கள் கூட்டம்  அலை மோதியது.
புதுச்சேரி சண்டே மார்க்கெட் செயல்படும் காந்திவீதியில் நேற்று காலை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்ததால் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலையில் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர். 
ஆபத்தான குளியல்
புதுச்சேரி தலைமை செயலகம் முதல் பழைய துறைமுக பாலம் வரை கடற்கரையில் செயற்கை   மணல்  பரப்பு உருவாகி உள்ளது. புதுவை கடல் குளிப்பதற்கு ஆபத்தான பகுதியாகும். எனவே பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்பதை அறிவுறுத்தும் வகையில் கடற்கரையோரங்களில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த எச்சரிக்கை பலகைகள் உப்புகாற்றினால் சேதமடைந்து உள்ளது. ஆழம் தெரியாமல் கடலின் உள்ளே சென்று ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போடுகின்றனர். எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story