அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை தி.மு.க. பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை தி.மு.க. பழிவாங்குகிறது - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களை தி.மு.க பழிவாங்குகிறது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை,

தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் கோவை மாவட்டம் என்றென்றும் அ.தி.மு.க. கோட்டையாக இருந்து வருகிறது. எனவே கோவை மாவட்டத்தில் வாக்களித்தபொது மக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலில் வெற்றி பெற தி.மு.க இந்த மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தியது. ஆனால் நமது தொண்டர்கள், நிர்வாகிகள் நேர்மையாக இருந்ததால் அ.தி.மு.க. முழுமையாக வெற்றி பெற்றது.

வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்களுக்கும் நன்றியாக இருப்போம் என மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் கோவையில் குடிநீர் குழாய் திட்டம் உள்ளிட்ட 96 பணிகளை தடை செய்து உள்ளார்கள். தி.மு.க. வினர் ஆட்சிக்கு வருவதற்காக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள்.

தற்போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் சூழலை உருவாக்குகிறார்கள். நான் தான் முதலில் பழிவாங்கப்படுவேன் என எதிர்பார்த்தேன். என்னென்ன வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார். தொண்டர்கள் மீது வழக்குப் போட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்.

தி.மு.க. பதவிக்கு வரும் போது பொய்யான வழக்குகளை எப்போதும் போடும். எதற்கும் நாங்கள் அஞ்சமாட்டோம். அ.தி.மு.கவை அடக்க நினைத்தால் அடங்க மாட்டோம். அ.தி.மு.க.வை முடக்க முடியாது.

எங்களை பழி வாங்க நினைத்தால் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என அறிவித்தார்கள். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வில்லை. தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது.

கோவை மாவட்டத்திற்கு தி.மு.க. திட்டங்களை தராவிட்டால் நாங்கள் கேள்வி கேட்போம். அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தி.மு.க.வுக்கு செல்ல மாட்டார்கள். அ.தி.மு.க. மக்களுக்காக பணிகளை செய்யும். கோவை மாவட்டத்தில் நாளை மறுநாள் 28-ந் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story