100 இடங்களில் மீண்டும் தடுப்பூசி திருவிழா


100 இடங்களில் மீண்டும் தடுப்பூசி திருவிழா
x
தினத்தந்தி 27 July 2021 6:44 PM GMT (Updated: 2021-07-28T00:14:23+05:30)

புதுவையில் 100 இடங்களில் நாளை தொடங்கி 3 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது.

புதுவையில் 100 இடங்களில் நாளை தொடங்கி 3 நாட்கள் கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது.
புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தடுப்பூசி திருவிழா
புதுவை      மாநிலத்தில் வருகிற ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாநிலமாக மாற்ற அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக மீண்டும் தடுப்பூசி திருவிழா நடத்தப் படுகிறது.
இந்த தடுப்பூசி திருவிழாவினை மற்ற துறைகளுடன் இணைந்து நாளை (வியாழக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை 3 நாட்கள் நடத்த சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சுமார் 100 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
மருத்துவ ஆலோசனை
பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த சந்தேகங்களை தீர்க்க அனைத்து துறைகளும் சுகாதாரத்துறையுடன் இணைந்து குழுக்களை அமைத்துள்ளன. இந்த குழுக்கள் வீடுவீடாக சென்று தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூறி தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த உள்ளனர். 
தடுப்பூசிக்கு தயக்கம் காட்டும் மக்களிடம் மருத்துவ குழுவினர் அவர்கள் வீட்டுக்கே நேரடியாக சென்று மருத்துவ ஆலோசனைகளை வழங்கியும் நடமாடும் மையம் மூலம் தடுப்பூசி செலுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு
மேலும் அவர் விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர சிவப்பு நிற ரேஷன் கார்டு (அசல்) மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களை கொண்டு இலவசமாக பதிவு செய்துகொள்ளலாம். மருத்துவமனைகளில் மட்டுமின்றி சிறப்பு மையங்களிலும் பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள் நடக்கிறது.
இதுவரை ஒரு லட்சத்து 703 குடும்பங்களும், அந்த குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரத்து 589 தனிநபர்களும் இந்த காப்பீட்டு திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளனர். புதுச்சேரி முழுவதும்     விரைவில் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் இந்த காப்பீட்டின் கீழ் பதிவு செய்ய புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் பதிவு    செய்யாதவர்கள் விரைவில் பதிந்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு  அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story