கொரோனா பயம் காரணமாக தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு இல்லை


கொரோனா பயம் காரணமாக தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு இல்லை
x
தினத்தந்தி 27 July 2021 10:54 PM GMT (Updated: 2021-07-28T04:24:33+05:30)

கொரோனா பயம் காரணமாக தீபாவளி சிறப்பு ரெயிலுக்கு போதிய வரவேற்பு இல்லை. 10 முதல் 15 சதவீதம் டிக்கெட்டுகளே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்புவது வழக்கம். தமிழகத்தை பொறுத்த வரை தீபாவளிக்கு முன்பதிவு தொடங்கும் நாளில் ரெயில் டிக்கெட்டுகள் சில மணி நேரங்களில் விற்று தீர்ந்து விடுவது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளியையொட்டி தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு கவுன்டர்கள் மற்றும் ஆன்-லைன் புக்கிங் முன் பதிவு ஆகியவை கடந்த 7-ந்தேதி தொடங்கியது. இருந்த போதிலும் பொதுமக்களிடம் கொரோனா பயம் காரணமாக தீபாவளி முன்பதிவிற்கு போதிய வரவேற்பு இல்லை.

சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் ரெயில்கள் மற்றும் மதுரை, நெல்லை, நாகர்கோவில் வரை தினமும் இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களுக்கு முன்பதிவு தள்ளாடுகிறது. இதில் 10 முதல் 15 சதவீதம் டிக்கெட்டுகளே விற்றுள்ளன. இந்த நிலையில் மேலும் சிறப்பு ரெயில்கள் எப்படி இயக்குவது என்று தெரியாமல் தென்னக ரெயில்வே தவித்து வருகிறது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பயம் காரணமாக பொதுமக்கள் வெளியூர் செல்ல விரும்புவதில்லை இதன் காரணமாகவே தான் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தீபாவளிக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் பொதுமக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு கூடுதல் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story