14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்


14 லட்சம் புகார்தாரர்களின் மின்சார கட்டணம் திருத்தம் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2021 1:52 AM GMT (Updated: 2021-08-01T07:22:03+05:30)

தமிழகத்தில் மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னை, 

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மின்சார வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, பகிர்மான இயக்குனர் எம்.செந்தில்வேல் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து மின்சார பகிர்மான வட்டங்களில் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குறைந்த மின்னழுத்தம் ஏற்பட காரணமாக உள்ள மின்மாற்றிகளை மாற்ற ரூ.625 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு 6 ஆயிரத்து 830 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 7 கோட்டங்களில் மேலே செல்லும் மின்சார கம்பிகள் ஆயிரத்து 283 கோடி ரூபாய் செலவில் நிலத்தடியில் செல்லும் வகையில் புதைவடங்களாக மாற்றப்பட உள்ளது.

மின்சார நுகர்வோர்களின் புகார்களை சரிசெய்யும்போதும், மின்சார இணைப்பு கொடுக்கும்போதும் மின்சார கம்பங்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை எடுத்துவர மின்சார நுகர்வோரின் செலவில் வாகன வாடகை, பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்கக்கூடாது. இதுகுறித்து, புகார் எழுந்தால் விழிப்புப்பணிக்குழு பார்வையிட்டு அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்டு உள்ள மின்னகம் நுகர்வோர் சேவை மையத்தில் 9498794987 என்ற செல்போன் எண் மூலம் இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு, அதில், 1 லட்சத்து 59 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்ற வாக்குறுதி படிப்படியாக நிறைவேற்றப்படும்.

தி.மு.க. ஆட்சியில் மின்சார தடை ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளதாக கூறியவர்கள், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ஏன் வழங்கவில்லை?

விவசாய மின்இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் மின்சார இணைப்பு வழங்கப்படும். மின்சார வாரியத்தின் வருவாயைப் பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மின்சார கட்டணம் அதிகமாக இருப்பதாக வந்த 14 லட்சம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சார கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின் பகிர்மானத்தில் உள்ள 9 மண்டலங்களில் 44 வட்டங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள், வட்டங்களில் அமைந்துள்ள மின் இணைப்புகள் சரியாக பகிரப்படவில்லை. இந்த வேறுபாட்டை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story