தனியார் நிதி நிறுவன சொத்துக்களை முடக்க நடவடிக்கை


தனியார் நிதி நிறுவன சொத்துக்களை முடக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Aug 2021 5:31 PM GMT (Updated: 2021-08-02T23:01:54+05:30)

ரூ.5 கோடி மோசடி வழக்கு தொடர்பாக தனியார் நிதி நிறுவன சொத்துக்களை முடக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஏஜெண்டுகள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரூ.5 கோடி மோசடி வழக்கு தொடர்பாக தனியார் நிதி நிறுவன சொத்துக்களை முடக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஏஜெண்டுகள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.5 கோடி மோசடி
புதுவை இந்திராகாந்தி சதுக்கம் அருகே உள்ள சக்தி டவரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு பணத்தை முதலீடு செய்தால், 10 மாதத்தில் இரட்டிப்பாக்கி தருவதாக கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தனர். இதனை உண்மை என்று நம்பிய புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த பலரும் லட்சக்கணக்கில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிதி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது. 
இதனால் பாதிக்கப்பட்டவர்கள், புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ரூ.5 கோடி வரை மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. 
இது தொடர்பாக அந்த நிதி நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ரமேஷ் (வயது 34), தமிழ்நாட்டில் மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் இருப்பது தெரியவந்தது.
25 பேர் மீது வழக்கு
இதனை      தொடர்ந்து    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று சேலம் சென்று ரமேசை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். பின்னர் அவரை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர். 
அப்போது இந்த நிறுவனம் வழங்கிய கமிஷன் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளுக்கு ஆசைப்பட்டு 25-க்கும் மேற்பட்டோர் ஏஜெண்டுகளாக செயல்பட்டு பணம் வசூல் செய்தது தெரியவந்தது. அவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறையில் அடைப்பு
மேலும் அந்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி அந்த நிறுவனத்துக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சொத்துகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதனை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே 4 நாட்கள் விசாரணை முடிந்து, ரமேசை போலீசார் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சேலம் சிறையில் அடைத்தனர்.

Next Story