ஜனாதிபதி வருகையையொட்டி கோவை, நீலகிரியில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறப்பதற்கு தடை


ஜனாதிபதி வருகையையொட்டி கோவை, நீலகிரியில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறப்பதற்கு தடை
x
தினத்தந்தி 3 Aug 2021 12:37 AM GMT (Updated: 2021-08-03T06:07:52+05:30)

ஜனாதிபதி வருகையை ஒட்டி கோவை, நீலகிரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சூலூர் விமான படைத்தள பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை, 

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள நேற்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்.பின்னர் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துமுடித்துவிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவையில் உள்ள சூலூர் விமானப்படைத்தளம் வருகிறார். பின்னர் அங்கிருந்து காலை 11.40 மணிக்கு ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். ஊட்டி ஹெலிகாப்டர் தளத்தில் மதியம் 12.15 மணிக்கு வந்து இறங்குகிறார். பின்னர் சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார். இனை தொடர்ந்து குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை(புதன்கிழமை) கலந்துரையாடி பேசுகிறார். நாளை ராணுவ நிகழ்ச்சியை முடித்துவிட்டு 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். 6-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், ஊட்டி ராஜ்பவனுக்கு வருகிறார்.

இதனால் ஊட்டியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு சோதனை பிரிவு போலீசார் ராஜ்பவன், தாவரவியல் பூங்கா, ஜனாதிபதி செல்லும் இடங்களில் சோதனை நடத்தினர்.இதற்கிடையில் 5-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை ஜனாதிபதி சுற்றி பார்க்க உள்ளதாக தெரிகிறது. இயற்கை எழில் மிகுந்த தாவரவியல் பூங்காவை ஜனாதிபதி கண்டு ரசிப்பதற்காக கோவையில் இருந்து 2 பேட்டரி கார்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி கோவையை அடுத்த சூலூர் பகுதியிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் விமானப்படை தளத்தை சுற்றியும் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் தொடர்ந்து பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் ராணுவ ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் வருகையின் போது வானிலையில் மாற்றம் ஏற்பட்டால் அவர் தரைவழி மார்க்கமாக ஊட்டி செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சூலூர் விமானப்படைத்தள பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவையில் ஜனாதிபதி செல்லக்கூடிய வாகன வழி பாதைகளில் நேற்று போலீசாரால் தீவிர சோதனை நடந்தது. அப்போது ராணுவம் மற்றும் போலீசார் வாகனங்கள் அணிவகுத்து பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் 41 ராணுவ வாகனங்கள் பங்கேற்றன. முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உள்ளிட்டோர் ராணுவ அதிகாரிகளிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story