ராமேசுவரம் கோவிலில் நாளை முதல் தரிசனத்துக்கு அனுமதி உண்டா, இல்லையா? - பக்தர்கள் குழப்பம்


ராமேசுவரம் கோவிலில் நாளை முதல் தரிசனத்துக்கு அனுமதி உண்டா, இல்லையா? - பக்தர்கள் குழப்பம்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:30 AM GMT (Updated: 2021-08-03T09:00:27+05:30)

ராமேசுவரம் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி உண்டா? அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வராததால் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

ராமேசுவரம்,

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான கோவில்களில் வருகிற 8-ந் தேதி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 2 நாட்களாகவே பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் 2-வது நாளாக நேற்றும் பக்தர்கள் தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஆடி பதினெட்டாம் பெருக்கான இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட 3 நாள் தடையானது இன்றுடன் முடிவடைகிறது.

இதனால் நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்குமா? அல்லது தடை நீக்கப்படுமா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே இன்று தெளிவான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடும்பட்சத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் ராமேசுவரம் வருவதை தவிர்ப்பதோடு, நீண்ட தூரத்தில் இருந்து வந்து தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கோவிலின் சாமி சன்னதி மற்றும் மூன்றாம் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் கோவிலின் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

Next Story