சென்னையில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்


சென்னையில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
x
தினத்தந்தி 3 Aug 2021 4:55 AM GMT (Updated: 3 Aug 2021 4:55 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னையில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள நேற்று மதியம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தார்.பின்னர் சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கவர்னர் மாளிகையில் தங்கினார்.

இந்நிலையில், இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை கவர்னர் மாளிகையில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவையில் உள்ள சூலூர் விமானப்படைத்தளம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 11.40 மணிக்கு ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். 

ஊட்டி ஹெலிகாப்டர் தளத்தில் மதியம் 12.15 மணிக்கு வந்து இறங்குகிறார். பின்னர் சாலை வழியாக ஊட்டி ராஜ்பவனுக்கு சென்று தங்குகிறார். இனை தொடர்ந்து குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை(புதன்கிழமை) கலந்துரையாடி பேசுகிறார். நாளை ராணுவ நிகழ்ச்சியை முடித்துவிட்டு 5-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் ஓய்வெடுக்கிறார். 6-ந் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார். முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும், ஊட்டி ராஜ்பவனுக்கு வருகிறார்.

இதனால் ஊட்டியில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் மேற்பார்வையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1,240 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக ஜனாதிபதி வருகையையொட்டி கோவையை அடுத்த சூலூர் பகுதியிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story