திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை
x
தினத்தந்தி 4 Aug 2021 4:52 AM GMT (Updated: 4 Aug 2021 4:52 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மேலும் 4 நாட்கள் தடை விதித்து கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ஆடி மாதத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய கோவில்களான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு கடந்த 1-ந் தேதி முதல் நேற்று (3-ந் தேதி) வரையும், வருகிற 8-ந் தேதியும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தொடர்ந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை மேலும் சில நாட்கள் நீட்டித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் இன்று முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது. இதன்மூலம் இந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும்.

மேலும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ந் தேதி வரையும், வருகிற 10, 13-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story