தாமதமானாலும் நல்ல தீர்ப்பு: நீதித்துறை மீதான நம்பிக்கை வீண் போகவில்லை சுப்பையாவின் மனைவி கண்ணீர் பேட்டி


தாமதமானாலும் நல்ல தீர்ப்பு: நீதித்துறை மீதான நம்பிக்கை வீண் போகவில்லை சுப்பையாவின் மனைவி கண்ணீர் பேட்டி
x
தினத்தந்தி 5 Aug 2021 1:25 AM GMT (Updated: 2021-08-05T06:55:56+05:30)

நீதித்துறை மீதான நம்பிக்கை வீண் போகவில்லை என்றும், தாமதாமானலும் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளதாகவும் டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி கண்ணீர்மல்க கூறினார்.

சென்னை,

டாக்டர் சுப்பையா கொலை வழக்கின் தீர்ப்பை அறிந்து கொள்வதற்காக இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான அவரது மனைவி சாந்தி மற்றும் அவரது மகள்கள் சுவேதா, ஷிவாணி ஆகியோர் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

நீதிபதி அல்லி தீர்ப்பை படித்த போது, அரசு வக்கீலுடன் அவர்கள் மூவரும் கோர்ட்டு அறைக்குள் இருந்தனர். குற்றவாளிகளுக்கு தூக்கு மற்றும் ஆயுள்தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்ததும் சாந்தி அவரது கணவரை நினைத்து உணர்ச்சிவசப்பட்டார். அப்போது அவர் கண்கலங்கினார். அவரது மகள்கள் அவரை தேற்றினர்.

இதைத்தொடர்ந்து சாந்தியை அவரது மகள்கள் இருவரும் கைத்தாங்கலாக கோர்ட்டு அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

இதன்பின்பு சாந்தி கண்ணீர்மல்க நிருபர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:-

நானும், கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம். அது வீண்போகவில்லை. தாமதமானாலும் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.

தீர்ப்பினால் எனது கணவர் திரும்பி வரப்போவதில்லை. இருந்தாலும், இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க இந்த மாதிரியான தீர்ப்பு முன் உதாரணமாக இருக்கும்.

எனது கணவர் சுப்பையா மரண வேதனை அனுபவித்த 9 நாட்களில் மணமாகாத எங்கள் மகள்களை நினைத்து கலங்கினார். அவர் கலங்கியதற்கு தற்போது கிடைத்துள்ள தீர்ப்பு ஆறுதலான தீர்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் விஜயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த வழக்கில் சி.பி.ஐ.யை விட சென்னை போலீசார் மிகச்சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், இளங்கோவன், ராஜேஷ் கண்ணா ஆகியோர் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.

இது ஒரு சவாலான வழக்கு. சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டன. வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. இதையெல்லாம் தாண்டி இந்த வழக்கில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த தீர்ப்பு கூலிப்படைகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். இந்த வழக்கிற்காக பல நாட்கள் இரவு தூங்காமல் உழைத்தோம்.

அதற்கு பலன் கிடைத்துள்ளது. வழக்கு விசாரணை முடிவில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தினோம். அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story