மாநில செய்திகள்

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை + "||" + In the case of the murder of Dr. Subbaiah Father-sons Execution of 7 persons

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை
பிரபல டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை, 

சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர் பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி செல்ல சென்ற போது கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார்.

பலத்த காயம் அடைந்த அவர், ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வந்தார். 9 நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலன் அளிக்காமல் 23-ந் தேதி உயிரிழந்தார்.

சுப்பையாவின் தாய்மாமன் பெருமாள் என்பவருக்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள 2¼ ஏக்கர் நிலம் கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் உள்ளது.

இந்த நிலத்தை பெருமாள் தனது சகோதரியும், டாக்டர் சுப்பையாவின் தாயாருமான அன்னக்கிளி பெயரில் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் கன்னியாகுமரி மாவட்டம் காணிமடத்தைச் சேர்ந்த அன்னப்பழம் என்பவருக்கும், அன்னக்கிளிக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நடந்து வந்தது. இதுதொடர்பாக சிவில் வழக்கும் நடந்து வந்துள்ளது.

அன்னப்பழம், அன்னக்கிளி ஆகியோரை தொடர்ந்து டாக்டர் சுப்பையா, அன்னப்பழத்தின் மகன் ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பிரச்சினை நீடித்தது.

டாக்டர் சுப்பையாவை கொலை செய்து விட்டு, அந்த நிலத்தை அபகரிக்க பொன்னுசாமி குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றி உள்ளனர்.

தமிழகத்தில் அந்த சமயத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த கொலை தொடர்பாக அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பொன்னுசாமி, அவரது மனைவி மேரி புஷ்பம், இவர்களது மகன்கள் வக்கீல் பாசில், என்ஜினீயர் போரிஸ், பாசிலின் நண்பர்களான வக்கீல் வில்லியம், டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், வில்லியமின் உதவியாளரான கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வப்பிரகாஷ், அய்யப்பன் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதான அய்யப்பன் அப்ரூவர் ஆனார். இந்த வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை தினசரி விசாரணை என்ற அடிப்படையில் ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மே 31-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, தினம்தோறும் இந்த விசாரணை நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் என்.விஜயராஜ் ஆஜராகி வாதாடினார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அரசு தரப்பில் 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 173 சான்று ஆவணங்கள், 42 சான்று பொருட்கள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 3 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 7 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆசிரியர் பொன்னுசாமி உள்பட 9 பேரும் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.இந்த வழக்கில் பொன்னுசாமி உள்பட 9 பேரும் குற்றவாளிகள் என்று காலை 10.30 மணிக்கு அறிவித்த நீதிபதி அல்லி, தண்டனை விவரம் மதியம் தெரிவிக்கப்படும் என்றார். அப்போது பொன்னுசாமி உள்பட 9 பேரும் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றனர்.

இதைத்தொடர்ந்து மதியம் 2.15 மணிக்கு தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார்.

ஆசிரியர் பொன்னுசாமி, அவர்களது மகன் பாசில், போரிஸ், இவர்களது நண்பர்கள் வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஸ்குமார் ஆகியோருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை, கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை என இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

கூலிப்படையைச் சேர்ந்த முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை, கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை, உள்நோக்கத்துடன் கூட்டு சதி செய்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு தூக்கு தண்டனை என 3 தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அதேபோன்று மேரிபுஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் ஒரு ஆயுள் தண்டனைய என இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

9 பேருக்கும் மொத்தம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை அரசுக்கு செலுத்தவும், மீதமுள்ள ரூ.9 லட்சத்தை சுப்பையாவின் மனைவி சாந்திக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கில் கைதான அய்யப்பன் அப்ரூவர் ஆனதால் எந்த தண்டனையும் இன்றி விடுவிக்கப்பட்டார்.

தீர்ப்பை கேட்டதும் குற்றவாளிகள் 9 பேரும் மிகுந்த சோகம் அடைந்தனர்.

அதேவேளையில் தீர்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த டாக்டர் சுப்பையாவின் மனைவி சாந்தி, அவரது மகள் சுவேதா, ஷிவாணி ஆகியோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தீர்ப்புக்கு பின்பு, குற்றவாளிகள் 9 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

7 நீதிபதிகள் விசாரணை வழக்கு கடந்து வந்த பாதை

டாக்டர் சுப்பையா கொலை வழக்கு விசாரணை 10.12.2015 அன்று தொடங்கியது. சுமார் 250-க்கும் மேற்பட்ட முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 7 நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

26.2.2021 முதல் விவாதம் தொடங்கி நடைபெற்றது. இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய போது வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஓய்வு பெற்றார். அதே நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கி அவர் மூலம் வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டாக்டர் சுப்பையா தரப்பில் ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

ஆனால் ஐகோர்ட்டு, உடனடியாக அந்த பணியிடத்துக்கு புதிய நீதிபதியை நியமித்து வழக்கை 2 மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மே 31-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி, புதிய நீதிபதியாக அல்லி நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அனைத்து ஆவணங்களையும் படித்து பார்த்த நீதிபதி, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து ஐகோர்ட்டு விதித்த காலக்கெடுவுக்குள் தீர்ப்பை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த ரூ.5 லட்சம் கூலிப்பணம்
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த ரூ.5 லட்சம் கூலிப்பணம் தனிப்படை போலீஸ் அதிகாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்.
2. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வருகிற 2-ந் தேதி தீர்ப்பு சென்னை கோர்ட்டு அறிவிப்பு
டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் வருகிற 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை கோர்ட்டு அறிவித்துள்ளது.
3. சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு - மத்திய அரசு நடவடிக்கை
திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த சுவேந்து அதிகாரியின் தந்தை, சகோதரருக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
4. தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி சாலையோரம் நின்றவர்களுக்கு நேர்ந்த துயரம்.