அறிவுசார்ந்த வல்லரசாக மாற்றுவதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம்


அறிவுசார்ந்த வல்லரசாக மாற்றுவதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம்
x
தினத்தந்தி 5 Aug 2021 4:12 PM GMT (Updated: 2021-08-05T21:42:36+05:30)

இந்தியாவை அறிவுசார்ந்த வல்லரசாக மாற்றுவதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

இந்தியாவை அறிவுசார்ந்த வல்லரசாக மாற்றுவதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.
தமிழிசை சவுந்தரராஜன்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்கழக வேதியியல் தொழில்நுட்ப கழகத்தின் 78-வது தொடக்க விழா ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
அறிவியலும் தொழில்நுட்பமும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பங்காற்றி வருகின்றன. பன்னெடுங்காலமாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இந்தியா மகத்தான சாதனைகளை படைத்து இருக்கிறது. கணிதம், வானியல், மருத்துவம், இயற்பியல், வேதியியல் இன்னும் பல துறைகளில் இந்தியா படைத்துள்ள சாதனகைளால் அறிவியல் துறை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது.
தகுதி-திறமை
நம்முடைய பெருமையையும் அறிவியல் துறைகள் நாம் படைத்திருக்கும் சாதனைகளையும் மீண்டும் நிலைநாட்ட வேண்டிய தருணம் இது. இந்தியாவின் பெருமையை உலக அளவில் பறைசாற்ற வேண்டும். அதற்கான தகுதியும் திறமையும் இந்த நிறுவனத்துக்கு உண்டு.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிரதமர் மோடி உயர் முன்னுரிமை அளித்து வருகிறார். மற்ற நாடுகளை நாம் சார்ந்திருக்கும் நிலைமையை குறைக்கும் நோக்கத்தோடு ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தை தொடங்கிவைத்தார். அதன் விளைவாக உள்நாட்டிலேயே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக நாம் தடுப்பூசிகள் கண்டறிந்து இருப்பதே இதற்கு ஆதாரம்.
அறிவுசார்ந்த வல்லரசு
தற்சார்பு மிக்க இந்தியாவை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியம். விஞ்ஞானிகளும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும். 
பல்துறை ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம். தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்தியாவை ஒரு அறிவுசார்ந்த வல்லரசாக மாற்றுவதே இதன் நோக்கம்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Next Story