காரைக்காலில் பேராசிரியையின் ரூ.1 கோடி நிலத்தை விற்க முயற்சி


காரைக்காலில் பேராசிரியையின் ரூ.1 கோடி நிலத்தை விற்க முயற்சி
x
தினத்தந்தி 5 Aug 2021 4:25 PM GMT (Updated: 5 Aug 2021 4:25 PM GMT)

காரைக்கால் பேராசிரியைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் பேராசிரியைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்க முயன்ற ரியல் எஸ்டேட் உரிமையாளர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோசடி பத்திரப்பதிவு
காரைக்கால் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கவனிப்பாரின்றி கிடக்கும் நிலம், வீடுகளை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் மோசடியாக பத்திரப்பதிவு செய்து வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
அதன்படி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் ஆனந்தகுமார் உள்ளிட்ட சிலரும் நிலமோசடி குறித்து புதுச்சேரி கவர்னர், முதல்-அமைச்சர், போலீஸ் ஐ.ஜி.க்கு புகார் தெரிவித்தனர். 
இந்தநிலையில் ஆள்மாறாட்டம் செய்து பேராசிரியைக்கு சொந்தமான நிலத்தை விற்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பேராசிரியை நிலம்
காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலத்துறை தலைவரும், பேராசிரியையாக பணியாற்றி வருபவர் டி.ஏ.எஸ். மும்தாஜ்பேகம் (வயது56). இவருக்கு சொந்தமான நிலம் காரைக்கால் கோவில்பத்து கிராமத்தில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. 
காரைக்கால் அன்புநகரைச் சேர்ந்தவர் மும்தாஜ்பேகம் (62). இவர் புதுச்சேரி வில்லியனூர் முகவரியில் வசிப்பதாக, போலியாக ஆதார் கார்டு முகவரி தயாரித்து ஆள் மாறாட்டம் செய்து அவரது பெயருக்கு பேராசிரியை மும்தாஜ்பேகத்தின் நிலத்தை விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்காக காரைக்கால் காமராஜர் சாலையில் வசிக்கும் சிங்காரவேலு மகன் மணிகண்டன் (38), மாரியப்பன் மகன் ராஜாஜி (32), காரைக்கால் தருமபுரத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது ரியாஸ் (30) ஆகியோர் போலியாக பவர் ஏஜெண்ட் பத்திரம் தயாரித்துள்ளனர்.
சந்தேகமடைந்த பதிவாளர்
இந்த ஆவணங்களை காரைக்கால் மாவட்ட சார்பதிவாளர் செல்லமுத்துவிடம் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்தனர். இதை ஆய்வு செய்தபோது சந்தேகமடைந்த சார்பதிவாளர், இந்த சொத்து குறித்து பேராசிரியை மும்தாஜ்பேகத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை இந்த மோசடி குறித்து காரைக்கால் நகர போலீசில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் உத்தரவின் பேரில், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமாள், பிரவீன்குமார் மற்றும் போலீசார் விசாரணையில் இறங்கினர். 
ரியல் எஸ்டேட் உரிமையாளர்
மோசடியாக நிலத்தை வாங்க முயன்ற மும்தாஜ்பேகம், மணிகண்டன், ராஜாஜி, முகமது ரியாஸ் ஆகியோரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதில், இந்த நிலமோசடிக்கு மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்தவர், காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கட்டபொம்மன் என்ற செந்தில்குமார் (38) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், காரைக்காலில் கவனிப்பாரின்றி கிடக்கும் பல இடங்களை, இதேபோல் போலியாக ஆவணங்கள் தயாரித்து பதிவு செய்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. ஏற்கனவே நிரவி போலீஸ் நிலையத்தில், கட்டபொம்மன் மீது ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. 
மேலும் 2 பேர் சிக்கினர்
இதைத்தொடர்ந்து கட்டபொம்மனை பிடித்து விசாரணை நடத்தியதில், இந்த மோசடியில் கோட்டுச்சேரி காந்திநகரைச் சேர்ந்த ராமுபிள்ளை மகன் மூர்த்தி (59), காரைக்கால் பெரியப்பேட்டைச் சேர்ந்த அசோக் (41) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் வெட்ட வெளிச்சமானது.
இதையடுத்து மும்தாஜ்பேகம், மணிகண்டன், ராஜாஜி, முகமது ரியாஸ், கட்டபொம்மன், மூர்த்தி ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய அசோக் மட்டும் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
நிலமோசடி குறித்து புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட் பாராட்டினார்.

Next Story