தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு: கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரம் வெளியீடு


தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு:  கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரம் வெளியீடு
x
தினத்தந்தி 6 Aug 2021 3:44 PM GMT (Updated: 2021-08-06T21:14:45+05:30)

தமிழகத்தில் கூடுதலாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கடைகள் இயங்குவதற்கான கட்டுப்பாடுகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.



சென்னை,

தமிழகத்தில் கூடுதலாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடைகள் இயங்குவதற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது பற்றிய விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  இதுபற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட உத்தரவில், 'இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதுடன், அவற்றை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

• கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

• கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதனை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

• அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது.

• கடைகளின் நுழைவுவாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

• மேற்படி விதிமுறைகளை பின்பற்றாமலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக / இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story