ஓடும் பஸ்சில் திடீர் தீ; 20 பயணிகள் உயிர் தப்பினர்


ஓடும் பஸ்சில் திடீர் தீ; 20 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 6 Aug 2021 6:32 PM GMT (Updated: 6 Aug 2021 6:32 PM GMT)

பொறையாறு அருகே ஓடும் பஸ்சில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பயணிகளுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மயிலாடுதுறை,

புதுச்சேரி அரசுக்கு சொந்தமான பி.ஆர்.டி.சி. பஸ் நேற்று காலை மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செந்தில் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக பரசுராமன் (46) இருந்தார்.

பொறையாறு ராஜீவ்புரம் அருகில் பஸ் சென்றபோது பஸ்சின் முன்பகுதியில் புகை வருவதை கண்டு டிரைவர் சாலையோரம் பஸ்சை நிறுத்தினார். அப்போது புகை பெருமளவில் வந்ததால் பஸ்சில் இருந்த 20 பயணிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர் பஸ்சை விட்டு அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தி்ல் பஸ்சின் என்ஜின் பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனாலும் பஸ்சின் முன்பகுதி மளமளவென எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொறையாறு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருந்தபோதிலும் பஸ்சின் முன்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. பஸ்சின் எலெக்ட்ரிக்கல் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

Next Story