பப்ஜி மதனின் குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக்கோரிய மனு மீது நாளை மறுநாள் விசாரணை


பப்ஜி மதனின் குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக்கோரிய மனு மீது நாளை மறுநாள் விசாரணை
x
தினத்தந்தி 7 Aug 2021 10:29 AM GMT (Updated: 7 Aug 2021 10:29 AM GMT)

பப்ஜி மதன் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரிய மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெறுகிறது.




சென்னை,

குண்டர் சட்டம் ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் மனு நாளை மறுநாள் விசாரணை

யூ-டியூப் வீடியோ சேனலில் பிரபலமானவர் மதன் (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூ-டியூப் சேனலில் தொடர்ந்து நடத்தி வந்தார். அவர் தனது யூ-டியூப் சேனலில் பெண்களை பற்றியும், அவர்களது அங்கங்களை பற்றியும் ஆபாசமாக பேசி கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் வேல்முருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

மதன் மீதும், அவரது மனைவி கிருத்திகா (வயது 25) மீதும் 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதனின் யூ-டியூப் மன்மத விளையாட்டுகளுக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான கிருத்திகாவும் துணையாக செயல்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது 8 மாத கைக்குழந்தையுடன் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.  அவர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த மதனும் கடந்த ஜூனில் தர்மபுரியில் கைது செய்யப்பட்டார்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்ட மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரது பெயரில் உள்ள வங்கி கணக்குகள் ரூ.1 கோடி பணத்துடன் முடக்கப்பட்டது. அவரது லேப்டாப்களில் பதிவு செய்து வைத்திருந்த 700 ஆபாச வீடியோக்களும், யூ-டியூப் மூலம் வெளிவராமல் முடக்கப்பட்டது. மதன் கோடிக்கணக்கில் பணம் சேர்த்தது பற்றி வருமான வரித்துறை விசாரணைக்கும் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

மதன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க பப்ஜி மதனின் யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவரது யூ டியூப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அவர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்தது.  சிறையில் உள்ள பப்ஜி மதனை நேற்று அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்தனர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்பு மதன் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி பப்ஜி மதன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள் தனது வீடியோவை எடிட் செய்து அவ்வாறு பதிவேற்றியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.  இந்த மனு மீது நாளை மறுநாள் விசாரணை நடைபெறவுள்ளது.


Next Story