கடலுக்குள் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் போராட்டம்


கடலுக்குள் இறங்கி கருப்புக் கொடியுடன்   மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2021 5:28 PM GMT (Updated: 9 Aug 2021 5:28 PM GMT)

கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நேற்று மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விசைப்படகு உரிமையாளர்கள் மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் நேற்று மீனவர்கள் கருப்புக் கொடி ஏந்தி கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தினர். விசைப்படகு உரிமையாளர்கள் மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடலில் இறங்கி போராட்டம்
மத்திய அரசின் கடல்சார் மீன்வள மசோதாவுக்கு அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி மீனவர் சங்க கூட்டமைப்பினர் சோலை நகரில் கடலுக்குள் இறங்கி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கைகளில் கருப்புக்கொடி மற்றும் பதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.
அப்போது அவர்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதிய கடல்சார் மீன்வள சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மீனவர்களுக்கான மானியம் குறைப்பு, எல்லைகளை குறுக்கி மீன்பிடி தொழிலை நசுக்கும் இந்த மசோதாவால் மீனவர்    வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இயக்குனர் அலுவலகம் முற்றுகை
இதேபோல் புதுச்சேரியில் உள்ள உள்ள 18 மீனவ கிராம விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
புதிய கடல்சார் மீன்வள மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.  படகுகள் அனைத்தும் தேங்காய்திட்டு உள்ளிட்ட துறைமுகங்களில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. 
காலாப்பட்டு
பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு மற்றும் சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் தலைமையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதவிர மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களது வீடுகள், படகுகளில் மீனவர்கள் கருப்புக்கொடி கட்டி இருந்தனர்.
கோட்டக்குப்பம் ரவுண்டானா பகுதியில் மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் சோதனைக்குப்பம், நடுக்குப்பம், தந்திராயன் குப்பம், சின்ன முதலியார்சாவடி, பொம்மையார்பாளையம், பிள்ளைச்சாவடி ஆகிய 6 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் கலந்துகொண்டனர்.
இதையொட்டி மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வரத்து அடியோடு நின்று போனதால் மார்க்கெட்டுகளில் மீன்களின் விலை வழக்கத்தை விட நேற்று சற்று அதிகமாக இருந்தது.

Next Story