பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜர்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:21 PM GMT (Updated: 2021-08-10T03:51:44+05:30)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார்.

விழுப்புரம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகார் தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி. மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோர்ட்டில் ஆஜர்

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி கடந்த மாதம் 29-ந் தேதியன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம், இவ்வழக்கின் விசாரணை ஆகஸ்டு 9-ந் தேதி நடைபெறும் என்றும் அன்றைய தினம் சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரையும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கில் சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக 122 சாட்சிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்துள்ளதோடு 72 ஆவணங்களையும் சேகரித்துள்ள நிலையில் நேற்று இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தொடங்கியது.

இதற்காக இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் நீதிபதி கோபிநாதன் முன்பு நேரில் ஆஜராகினர்.

விசாரணை ஒத்திவைப்பு

இதையடுத்து அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட சிறப்பு டி.ஜி.பி., முன்னாள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி தனித்தனியாக மனுக்களை கொடுத்தனர். இதனை பரிசீலனை செய்த நீதிபதி, அந்த 2 பேருக்கும் ஜாமீன் வழங்கினார். மேலும் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி கோபிநாதன் ஒத்திவைத்தார்.

Next Story