தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் கடைகள் மீண்டும் திறப்பு


தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் கடைகள் மீண்டும் திறப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 1:04 AM GMT (Updated: 2021-08-10T06:34:44+05:30)

தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட சென்னையில் 9 இடங்களில் மீண்டும் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2 அலைகளிலும் தலைநகர் சென்னை பெரிதும் பாதிக்கப்பட்டது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே இருந்தது. இந்தநிலையில் கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்ட தொடங்கியது.

குறிப்பாக சென்னையில் வணிக வளாகங்கள் மற்றும் கடைவீதிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.

கடைகள் மூடல்

அதன்படி, தியாகராயநகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு, ஜாம்பஜார் பாரதிசாலை சந்திப்பு, பக்கி சாகிப் தெரு - அபிபுல்லா தெரு, என்.எஸ்.சி.போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்க்கெட், அமைந்தகரை மார்க்கெட், ரெட்ஹில்ஸ் மார்க்கெட், கொத்தவால்சாவடி மார்க்கெட் உள்பட 9 இடங்களில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், அங்காடிகள் கடந்த 31-ந்தேதி முதல் மூடப்பட்டன.

கடைகள் திறப்பதற்கான தடைக்காலம் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், கடைகள் மீண்டும் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேவேளை கடைகளை திறக்கக்கோரி வியாபாரிகள் மத்தியில் இருந்தும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்தநிலையில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றி மீண்டும் கடைகளை திறக்க பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.

9 நாட்களுக்கு பிறகு திறப்பு

இதனையடுத்து தியாகராயநகர் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் நேற்று காலை 6 மணிக்கு பிறகு வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டன.

கடைகள் அடைக்கப்பட்டதால் ஆள் அரவமின்றி காணப்பட்ட கடைவீதிகள் நேற்று மீண்டும் மக்கள் நடமாட்டத்தால் உயிர்ப்பெற தொடங்கின. குறிப்பாக சென்னையின் குட்டி வணிகத்தீவு எனப்படும் தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள் என எல்லா கடைகளும் திறக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் எதிர்பார்த்தபடி இல்லையென்றாலும் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடனேயே காணப்பட்டனர்.

பாதுகாப்பு வழிமுறைகள்

அதேவேளை 9 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், முன்புபோலவே கடையில் மக்கள் கூட்டம் இருக்கக்கூடாது, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணியாதோரை கடையில் அனுமதிக்க கூடாது, கிருமிநாசினி தெளித்தல் உள்பட கடைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும், கடையின் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பல்வேறு அறிவுரைகளை வியாபாரிகளுக்கு, பெருநகர மாநகராட்சி நிர்வாகம் வழங்கியிருக்கிறது. வியாபாரிகளும் பாதுகாப்பு வழிமுறைகளை கையாண்டு நேற்று வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வழிமுறைகளை பின்பற்றாத கடைகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story