மின்கம்பத்தில் கட்டிவைத்து வாலிபர் மீது தாக்குதல்


மின்கம்பத்தில் கட்டிவைத்து வாலிபர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 10 Aug 2021 5:36 PM GMT (Updated: 2021-08-10T23:06:07+05:30)

கரூர் அருகே மின்கம்பத்தில் கட்டிவைத்து வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவசி தேடி வருகின்றனர்.

கரூர் 
கரூர் அருகே மின்கம்பத்தில் கட்டிவைத்து வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சத்தம் கேட்டதால்...
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 30). இவர் மூலிமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இதனால் அங்குள்ள தனது அத்தை பழனியம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி பகல் 11 மணியளவில் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உதயகுமார் (33) என்பவர் வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்டதால் ராஜா அங்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த உதயகுமாரின் மனைவி  உங்களுக்கும் எங்களுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருக்கிறது. எனவே வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று கூறியுள்ளார். உடனே ராஜா அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்குதல்
இந்த சம்பவம் குறித்து உதயகுமாரின் மனைவி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த 8-ந் தேதி இரவு 8 மணியளவில் ராஜா வீட்டில் இருந்த போது அங்கு உதயகுமார் மற்றும் அவருடன் வந்த 3 பேர் ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த உதயகுமார் மற்றும் அவருடன் வந்த 3 பேரும் ராஜாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
வலைவீச்சு
இதை அறிந்த அவரது அத்தை பழனியம்மாள் சம்பவ இடத்திற்கு சென்று ராஜாவை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து  தலைமறைவாக உள்ள 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றார்.

Next Story