அவதூறு பேச்சு வழக்கில் கைது: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்


அவதூறு பேச்சு வழக்கில் கைது: பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்
x
தினத்தந்தி 10 Aug 2021 7:13 PM GMT (Updated: 2021-08-11T00:43:51+05:30)

அவதூறு பேச்சு வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மதுரை,

அவதூறாக பேசிய வழக்கில் கைதான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த ஸ்டேன் ஸ்வாமியின் நினைவாக கடந்த மாதம் 18-ந்தேதி அருமனை பகுதியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசியபோது அரசியல் தலைவர்களை அவதூறாக பேசியதாகவும், பூமித்தாயை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதயநோய் உள்பட பல்வேறு உடல் உபாதைகளுடன் அவதிப்படுகிறேன். மேலும் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என்பதை தெரிவிக்கிறேன். இதை கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

நிபந்தனை ஜாமீன்

முடிவில், மனுதாரர் மீண்டும் அரசியல் தலைவர்களையோ, மத ரீதியிலோ பேசமாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மனுதாரர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் நுழைய கூடாது. திருச்சியில் தங்கியிருந்து, அங்குள்ள தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story