அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி


அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் அமைச்சர் பொன்முடி உறுதி
x
தினத்தந்தி 11 Aug 2021 10:16 PM GMT (Updated: 11 Aug 2021 10:16 PM GMT)

அண்ணா பல்கலைக்கழகத்தை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி வருமாறு:-

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வேல்ராஜ், பதவி ஏற்பதற்கு முன்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த பல்கலைக்கழகத்தை பன்னாட்டு அளவில் உயர்த்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்விகளின் தரத்தை மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதன் அடிப்படையில், தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘கற்றல், கற்பித்தல்’ முறையை புகுத்தும்படி கூறியிருக்கிறோம். அதாவது குறிப்பிட்ட பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர் பாடம் நடத்தியதை வீடியோ மூலம் மாணவர்களுக்கு காண்பித்து, அதில் விவாதம், விளக்கம், கருத்துரை போன்றவற்றை வைப்பதாகும். சர்வதேச அளவில் வளர்ச்சி பெற்றுள்ள கல்வி முறை இது. இந்த முறையை அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொண்டு வருவார் என்று நம்புகிறோம்.

பாடத்திட்டம் மாற்றம்

பாடத்திட்டங்களிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி என்ற அடிப்படையில் மாணவர்களை உருவாக்கும் அளவில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம், தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்கான நடைமுறை பயிற்சி மாணவர்களுக்கு கிடைக்கும்.

தொழில் கல்வி மற்றும் சமூக சேவை ஆகிய தேவைகளுக்கு ஏற்ற மாணவர்களை உருவாக்குவதற்கான பாடத்திட்டம் வேண்டும். அதாவது, தொழிற்சாலைகளில் மாணவர்கள் பயிற்சி எடுப்பதை ஒரு பாடத்திட்டமாக கொண்டு வர வேண்டும்.

எதை படித்தாலும் ஆராய்ச்சி மனப்பான்மை இருக்க வேண்டும் என்பதற்காக, ஆராய்ச்சிக்கு தேவையான சர்வதேச அளவிலான வசதிகளை உருவாக்குவதும் இந்த பாடத்திட்டத்தில் இருக்கும். அந்த வகையில் பன்னாட்டு அளவில் பயிற்சி பெறும் அளவிற்கு அண்ணா பல்கலைக்கழகத்தை உயர்ந்த பல்கலைக்கழகமாக துணை வேந்தர் மாற்றுவார் என்று நம்புகிறோம்.

சூரப்பா அறிக்கை

முன்பொரு கட்டத்தில் அரசிற்கும் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பே இல்லாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஒரு ஒற்றுமையான சூழ்நிலையை உருவாக்க ஆலோசித்துள்ளோம். அந்த வேண்டுகோளை அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

முன்னாள் துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கை அரசிடம் தரப்பட்டுள்ளது. ஆனால் கோர்ட்டில் தடையாணை இருப்பதால் அது முடிந்த பிறகு அதுபற்றி அறிவிப்போம்.

தற்போது நடக்கும் ஆன்லைன் கல்வி எதுவரை நடக்கும்? என்பது மக்கள் நல்வாழ்வுத் துறையின் கருத்தையும், பெற்றோர்களையும் பொறுத்தது. அதை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story