அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு


அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 16 Sep 2021 10:06 PM GMT (Updated: 16 Sep 2021 10:06 PM GMT)

அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு.

சென்னை,

தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் கடந்த 13-ந் தேதியன்று மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். அவர், கொரோனா தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தாமதம் ஏற்பட்டால், நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.

அரசுப்பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு தற்போது 30 ஆக உள்ளது. அது 32 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த அளவிற்கும் குறைவான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பின் அளவு பொருந்தும்.

பட்டியலினத்தவர், பட்டியலின அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் அனைத்து வகுப்பினர்களிலும் உள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story