குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு உறுதி


குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை அமைச்சர் சேகர்பாபு உறுதி
x
தினத்தந்தி 23 Sep 2021 9:43 PM GMT (Updated: 23 Sep 2021 9:43 PM GMT)

“இன்னும் ஒரு வாரத்தில் உரிய சட்ட போராட்டத்தின் மூலம் குயின்ஸ்லேண்ட் பூங்கா கோவில் நிலம் என்று உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்”, என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

பயன்பாட்டில் இல்லாத நகைகளை

கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 5 அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. கோவில்களில் மொட்டை அடிப்பதற்கு இனி கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மொட்டை அடிக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாத ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்குள் 500 கோவில்களில் திருப்பணிகள் செய்யப்படும். கோவில்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ, மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். காணாமல் போன சிலைகளை மீட்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குயின்ஸ்லேண்ட் பூங்கா

சென்னை லயோலா கல்லூரி இடம் கோவிலுக்கு சொந்தமான நிலம் இல்லை. குயின்ஸ்லேண்ட் பூங்கா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலம் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் காசிவிஸ்வநாதர் மற்றும் வேணுகோபாலசாமி கோவிலுக்கு சமுத்திரமேடு கிராமத்தை சேர்ந்த உதயகிரி சாமைய்ய ஜமீன்தாரின் மகன் வெங்கைய்யா என்பவர் கோவிலின் பூஜை-பராமரிப்பு பணியை தொடர்ந்து நடத்துவதற்கு சொத்துக்களை உயில் சாசன ஆவணம் எழுதி பதிவு செய்துள்ளார்.

அதன்பின்பு பல்வேறு காரணங்களால் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதன்மீது இன்னும் ஒரு வாரத்தில் வல்லுனர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

Next Story