உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் சோதனை: ரூ.42 லட்சம் பறிமுதல் - புடவைகள், மின்விசிறிகள் கைப்பற்றப்பட்டன


உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் சோதனை: ரூ.42 லட்சம் பறிமுதல் - புடவைகள், மின்விசிறிகள் கைப்பற்றப்பட்டன
x
தினத்தந்தி 30 Sep 2021 9:07 PM GMT (Updated: 30 Sep 2021 9:07 PM GMT)

உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.42 லட்சம் ரொக்கப்பணம், மின்விசிறிகள், புடவைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சென்னை,

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும், ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலிலும் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தாசில்தார் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பறக்கும்படையினர் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த மாதம் 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பறக்கும் படையினரால் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 41 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டும் 7 லட்சத்து 99 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர 100 மின்விசிறிகள், 215 புடவைகள், ஆயிரத்து 65 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள், 600 குங்கும சிமிழ்கள், ஆயிரத்துக்கு அதிகமான மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

மேற்கண்ட தகவல் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story