பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்: வீரபாண்டி ஆ.ராஜா திடீர் மரணம் - மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி


பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்: வீரபாண்டி ஆ.ராஜா திடீர் மரணம் - மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
x
தினத்தந்தி 3 Oct 2021 12:27 AM GMT (Updated: 3 Oct 2021 12:27 AM GMT)

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ஆ.ராஜா நேற்று திடீரென மரணம் அடைந்தார். பிறந்த நாளன்று அவர் உயிரிழந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சேலம்,

சேலம் அருகே உள்ள பூலாவரி கிராமத்தை சேர்ந்தவர் மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். அவருடைய 2-வது மகன் வீரபாண்டி ஆ.ராஜா (வயது 58). எம்.ஏ. வரலாறு முடித்துள்ள இவர் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். தற்போது தி.மு.க. மாநில தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தார்.

வீரபாண்டி ராஜாவுக்கு நேற்று 58-வது பிறந்த நாள். தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துக்கு தயாராகுவதற்காக அவர் காலை 6 மணி அளவில் குளியலறைக்கு சென்றார். குளிக்க சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததை உறுதி செய்தனர். மேலும் அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் டாக்டர்கள் கூறினர். வீரபாண்டி ஆ.ராஜா இறந்ததை டாக்டர்கள் கூறியவுடன், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

பின்னர் வீரபாண்டி ஆ.ராஜாவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பூலாவரியில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் வீரபாண்டி ஆ.ராஜாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவருடைய மனைவி, மகள்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் காரில் காமலாபுரம் சென்று தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

வீரபாண்டி ஆ.ராஜாவின் இந்த திடீர் மறைவு, தி.மு.க. தொண்டர்கள் மட்டும் அல்லாமல் பூலாவரி பகுதியில் உள்ள கிராம மக்களில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வீரபாண்டி ஆ.ராஜாவின் உடல் அடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. அவரது உடல் அவருடைய தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சமாதி அருகிலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Next Story