பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு மனுக்கள் தள்ளுபடி


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு: சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 4 Oct 2021 7:10 PM GMT (Updated: 4 Oct 2021 7:10 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

விழுப்புரம்,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு, அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரின் பேரில், சிறப்பு டி.ஜி.பி., மற்றும் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் கார் சாவியை பறித்த செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

ஆஜர்

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு, நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆஜரானார். ஆனால் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வக்கீல் ஆஜராகி, சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகாதது குறித்து மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையே சிறப்பு டி.ஜி.பி. தரப்பில், இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டு வரம்பிற்குள் வராது. ஆகவே வேறு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்தார்.

மனுக்கள் தள்ளுபடி

அதேபோல், போலீஸ் சூப்பிரண்டு தரப்பில் இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த மனுக்கள் மீதான இருதரப்பு வாதம் முடிவடைந்தது. தொடர்ந்து இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாதன், சிறப்பு டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு தாக்கல் செய்த 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விடுவிக்க முடியாது

இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் கோர்ட்டுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், போலீஸ் சூப்பிரண்டு மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றும் உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Next Story