திருத்தப்பட்ட இடஒதுக்கீடு பட்டியல்


திருத்தப்பட்ட இடஒதுக்கீடு பட்டியல்
x
தினத்தந்தி 7 Oct 2021 8:17 PM GMT (Updated: 7 Oct 2021 8:17 PM GMT)

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து புதுவை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருக்கான திருத்தப்பட்ட இடஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
ஐகோர்ட்டில் வழக்கு
அதன்படி புதுவை மாநிலத்தில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த மாதம் 30-ந்தேதி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க இருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் நகராட்சிகளில் இடஒதுக்கீடு வழங்குவதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதை சரிசெய்து தேர்தலை நடத்த வேண்டும் என்று முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை      நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5 நாட்களில் அறிவிப்பு
விசாரணையில் வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அதை சரிசெய்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை திரும்பப்பெற அனுமதியும் வழங்கியது.
வார்டு ஒதுக்கீட்டை 5 நாட்களில் சரிசெய்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் உள்ளாட்சித்துறையானது கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதி வெளியிட்ட இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்தது. அதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையமும் இடஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை ரத்து செய்தது.
திருத்த பட்டியல்
மேலும் தேர்தல் அறிவிப்பை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி குறைந்தகால இடைவெளியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஆலோசித்து வந்தது.
இந்தநிலையில் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் நேற்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் கடந்த 23.8.2021 அன்று வெளியிட்ட அறிவிப்புக்கு மாற்றாக புதுச்சேரி நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துக்கள், கொம்யூன் பஞ்சாயத்துக்கள் (ஒதுக்கப்பட்ட இடங்கள், பதவிகளை அளித்தல் மற்றும் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்தல்) 1996-ன் 3-வது விதியின்படி கீழ்கண்டவாறு திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
நகராட்சிகள்
அதாவது, யூனியன் பிரதேசத்தில் உள்ள 5 நகராட்சி களுக்கான பதவிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்து பதவிகளுக்கான அட்டவணை இனத்தவர், அட்டவணை இன (பெண்கள்), பொது பெண்கள், பொது பிரிவுகளுக்களான இடஒதுக்கீடு பற்றிய புதிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
அதன்படி புதுச்சேரியில் உள்ள நகராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டு பட்டியல் விவரம்:
புதுச்சேரி- பெண்கள் (பொது), உழவர்கரை- பொது, காரைக்கால்- பெண்கள் (பொது), மாகி- பொது ஏனாம்- அட்டவணை இனத்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொம்யூன் பஞ்சாயத்து
கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சில் தலைவர் பதவிகளுக்கான திருத்தப்பட்ட இடஒதுக்கீட்டு பட்டியல் விவரம்:
அரியாங்குப்பம்-பொது, பாகூர்-அட்டவணை இனபெண்கள், மண்ணாடிப்பட்டு-பொது, நெட்டப்பாக்கம்-பொது, வில்லியனூர்-பெண்கள் (பொது), கோட்டுச்சேரி-பொது, நெடுங்காடு-அட்டவணை இனத்தவர், நிரவி-பெண்கள் (பொது), திருபட்டினம்-பொது, திருநள்ளாறு-பெண்கள் (பொது) என மறுஇடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி நகராட்சிகளின் கவுன்சிலர் பதவிகளுக்கான திருத்தப்பட்ட இடஒதுக்கீட்டு பட்டியல், கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கான திருத்தப்பட்ட இடஒதுக்கீட்டு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story