சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைப்பு - கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு


சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைப்பு - கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 8:29 PM GMT (Updated: 2021-10-08T01:59:25+05:30)

சட்டசபை கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்டு 13-ந் தேதி தொடங்கியது. தமிழக அரசின் திருத்திய நிதிநிலை அறிக்கை ஆகஸ்டு 13-ந் தேதியன்றும், 14-ந் தேதியன்று முதன்முறையாக வேளாண் பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த இரண்டு பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு முறையே நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்து உரையாற்றினர்.

அதைத் தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நிகழ்வுகள் நடந்தன. பல்வேறு சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கடந்த செப்டம்பர் 13-ந் தேதி முடிவடைந்தன. ஆகஸ்டு 13-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 13-ந் தேதிவரை 22 நாட்கள் சட்டசபை நடைபெற்றது.

இந்த நிலையில் ஆகஸ்டு 13-ந் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத் தொடரை முடித்து வைப்பதாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி முறைப்படி அறிவித்துள்ளார். இதுதொடர்பான தகவலை சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்டார்.

Next Story