இது தான் இன்ஸ்டாகிராம் காதல்...! மருத்துவனை சிகிச்சையில் காதலன்...!

இமைகள் மூலம் பேசும் காதல் அப்போதெல்லாம் இருந்தது. அது புனித காதலாக மலர்ந்தது. ஆனால் இப்போதோ இன்ஸ்டாகிராம் மூலமும் காதல் உருவாகிறது. அதனால்தான் ஏனோ பலருக்கு அது ஏடாகூட காதலாகி விடுகிறது. அதுபோன்ற காதலை பற்றி பார்க்கலாம்:-
கோவை,
கோவையை அடுத்த சூலூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் நவ இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு இருந்ததால் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்தார். இதன்மூலம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் தனக்கு 18 வயது ஆகிறது என்றும், கல்லூரி மாணவி என்றும் கூறியுள்ளார்.
முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் நெருக்கமாக பழக ஆரம்பித்தனர். இதனால் அவர்கள் இதயத்தை பரிமாறும் முன்பாக தங்களுக்குள் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் இளம்பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த வாலிபர் தனது நண்பர்களான விக்கி, பாலா, ஜோயல், முத்து ஆகியோரையும் அந்த இளம்பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிலையில் தான் அந்த வாலிபருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அது என்னவெனில், அந்த இளம்பெண்ணுக்கு 25 வயது என்பதும், ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த இளம்பெண்ணிடம் கேட்டபோது அவர் மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார்.
இதனால் நிம்மதி இழந்த அந்த வாலிபர், இதுகுறித்து தனது சகோதரியிடம் கூறி அழுதுள்ளார். அதற்கு அவரது சகோதரி இப்படித்தான் இன்ஸ்ட்கிராம் காதல் எல்லாம் இருக்கும். நல்லவேளை திருமணத்துக்கு முன்பாக தெரிந்து விட்டதே, அதற்காக நீ சந்தோஷப்படும் என்று ஆறுதல் கூறி உள்ளார் இதனை தொடர்ந்து இளம்பெண்ணுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
ஆனால்...அந்த பெண், கல்லூரி மாணவி என்று கூறி, அந்த வாலிபரிடம் கறக்க வேண்டியதை எல்லாம் கறந்து இருக்கலாமே... அவனும் காதல் மயக்கத்தில் கையில் உள்ளதெல்லாம் தந்து விட்டு கடைசியில் காணாமல் போய் இருப்பானே, நாம் கைப்பற்றியதை சுருட்டிக்கொண்டு ஆளை மாற்றி இருக்கலாமே, ஆனந்தமாக வாழ்ந்து இருக்கலாமே என்று நினைத்த ஆசையில் மண் விழுந்து விட்டதே என்று நினைத்தவளாய், ஆத்திரம் அடைந்தாள். தனது வில்லித்தனத்தை காட்டுவதற்கு முடிவு செய்தாள். அந்த வாலிபரைத்தான் வளைக்க முடியவில்லை. தனது வஞ்சக வேடம் தெரிந்து விட்டதை அறிந்து விட்டானே...அது அவனது நண்பர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று எண்ணினாள்.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண், கோவைக்கு வந்தாள்.அந்த வாலிபரின் நண்பர்களான விக்கி உள்ளிட்டோரை சந்தித்த அவள், உங்களது நண்பர் (வாலிபர்) என்னை காதலித்து விட்டு தற்போது பேச மறுக்கிறார். இது உயிருக்கு உயிராக காதலித்த என்னை உயிர் எடுக்க பார்க்கிறது...எனக்கு இப்போது ஆறுதல் சொல்ல ஆளில்லை. எனக்கு நீங்கள்தான்தான் இருக்கிறீர்கள் என்று, ஒரு அனுதாப நெருப்பை பற்றவைத்தாள்.
இதை தொடர்ந்து விக்கி உள்பட 4 பேர், அந்த பெண்ணின் பேச்சைஉண்மையாக நினைத்து, இது குறித்து சரியாக விசாரிக்காமல், அந்த இளம்பெண்ணுடன் சென்று, வாலிபரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அந்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் அந்த இளம்பெண் மற்றும் நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த வாலிபர் மட்டும் அல்ல, அவரது நண்பர்களும் பரிதாபமாக விழிக்கின்றனர். இப்படித்தானோ...இன்ஸ்டாகிராம் காதல்.
Related Tags :
Next Story