இலவச பயணம் என்பதால் பெண்களை கண்டால் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்


இலவச பயணம் என்பதால் பெண்களை கண்டால் நிற்காமல் செல்லும் அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 9 Oct 2021 8:14 AM GMT (Updated: 9 Oct 2021 8:14 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் இலவச பயணம் என்பதால் பெண்களை கண்டால் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அண்ணாமலை நகர்,

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிர் இலவசமாக பஸ்களில் பயணம் செய்யலாம் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதன்படி தி.மு.க. வெற்றி பெற்று, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அதையடுத்து தேர்தல் அறிக்கையில் கூறியபடி மகளிர் கட்டணமில்லாமல் நகர பஸ்களில் பயணம் செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த மே மாதம் 8-ந்தேதி முதல் பெண்கள், மாணவிகள் நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்கிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும். எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் 241 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைபடுத்தும் போது, கண்டக்டர்கள் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது. உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும். கண்டக்டர்கள் வேண்டுமென்றே பஸ்சில் இடம் இல்லை என்று கூறி, பஸ்சில் ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.

வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி செய்ய வேண்டும். பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும் என்பன உள்ளிட்ட அறுவுறுத்தல்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இதை கண்டிப்பாக கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் கடலூர் மாவட்டத்தில் சில இடங்களில் பெண்களை கண்டால் டிரைவர்கள் பஸ்களை நிறுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படியே ஏற்றினாலும் அவர்களை கோபத்துடன் பேசி வருவதாகவும் பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் இருக்கும் இடங்களில் இந்த நிலை உள்ளது.

குறிப்பாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். பெண் ஊழியர்கள் ஏராளமானோர் தினமும் பணிக்கு வந்து செல்கின்றனர். பல்கலைக்கழகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் தினமும் ஏராளமான பெண் நோயாளிகள் நகர பஸ்களில் வந்து செல்கின்றனர். ஆனால் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நகர பஸ்கள் பெண்களை கண்டால் நிறுத்தாமல் செல்வதாகவும், ஆண்கள் கையை காட்டினால் மட்டுமே பஸ்கள் நிறுத்தப்படுவதாகவும் பெண்கள் மற்றும் மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கு முன்பு ஆண்கள் கை காட்டினால் நிற்காமல் செல்லும் அரசு பஸ் டிரைவர்கள், தற்போது பெண்களை கண்டால் நிற்காமல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்கள் எந்த இடத்தில் நின்று கை காட்டினாலும் பஸ்சை நிறுத்தி விடுகிறார்கள். நகர பஸ்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் பயணிப்பதால் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு சேகரிப்பு தொகை (கலெக்ஷன் பேட்டா) கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள், மாணவிகளை ஏற்றாமல் செல்லும் டிரைவர், கண்டக்டர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இது வரை அப்படி புகார் எதுவும் வரவில்லை. புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story